ஜாதவை சந்திக்க அனுமதி மறுப்பு : பாக்., அரசு தொடர்ந்து அராஜகம்
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அந்நாட்டு ராணுவ கோர்ட்டால், துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை, இந்திய துாதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி வழங்க, பாக்., அரசு மறுத்துள்ளது.
நம் நாட்டு கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவை, பாக்., ராணுவ வீரர்கள், கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தியாவிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு, அந்நாட்டு ராணுவ கோர்ட், துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை நிறைவேற்ற, அந்நாட்டு ராணுவ தளபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாக்., சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாதவை, இந்திய துாதரக அதிகாரிகள் சந்திக்க, மத்திய அரசின் சார்பில், அந்நாட்டு அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை, பாக்., அரசு நிராகரித்துள்ளது. இஸ்லாமாபாத்தில், இந்திய துாதரக அதிகாரி கவுதம் பம்பாவ்லே, அந்நாட்டு வெளியுறவு செயலர் தெஹ்மினா ஜனுஜாவிடம், ஜாதவை சந்திப்பதற்கான விண்ணப்பத்தை முன் வைத்தார்.
ஆனால், ஜனுஜா, இந்த கோரிக்கையை மறுத்துவிட்டார். அதே போல், ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள துாக்கு தண்டனைக்கு எதிராக, மத்திய அரசின் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டையும், அந்நாட்டு அரசு ஏற்க மறுத்துவிட்டது.