கோகுலம் சிட்ஸ் ‘ரெய்டு’: ரூ.500 கோடி அபராதம்?
கோகுலம் சிட்ஸ் நிறுவனத்தில் நடந்த வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, அபராத வரி வசூலிக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: கோகுலம் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த போது, ஏதோ தவறு நடப்பது தெரிய வந்தது. அதனால், எட்டு மாதங்களாக, அதன் உரிமையாளர்களின் நடவடிக்கை மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்காணித்தோம். அதன் உரிமையாளர் கோபாலன், 72 வயதிலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாநிலங்களில் உள்ள, 400 கிளைகளை நேரடியாக சென்று ஆய்வு செய்வதை பார்த்து, ஆச்சரியம் அடைந்தோம்.
எனினும், தீவிர விசாரணைக்குப் பின், மாதாந்திர சீட்டுப் பணம் பற்றிய உண்மையான தொகையை, பல ஆண்டுகளாக, கணக்கில் காட்டாதது தெரிய வந்தது. மேலும், பல திரைப்படங்களை எடுத்துள்ளனர். தற்போதும், ஒரு திரைப்படத்தை தயாரிக்கின்றனர். ஆனால், திரைத்துறை கணக்கு வழக்குகளை முறையாக பராமரித்து வருகின்றனர்.
அவர்களது மருத்துவக் கல்லுாரியில், நன்கொடை பெற்றது தொடர்பான கோப்புகளை, கேரள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அதன்பின், விசாரணை துவங்கும். இதுவரை, 1,107 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், அவர்கள் செலுத்த வேண்டிய வரியை, கணக்கிட்டு வருகிறோம். அது, 500 கோடி ரூபாயை உறுதியாக தாண்டும். அதை செலுத்த, அவர்கள் ஒப்புக்கொண்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.