தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி தவறாக முடிவெடுக்காதீர்கள்: ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை
சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி ஒன்றும் செய்யப்போவதில்லை என்று விமர்சிப்பவர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி அதற்குள் தவறாக முடிவெடுக்க வேண்டாம், சாம்பியன்ஸ் டிராபியில் அவர் ஒரு குறிப்பிடத்தகுந்த பங்காற்றும் திறமை கொண்டவர் எனவே அவரை விமர்சிக்க வேண்டாம் என்கிறார் பாண்டிங்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில்:
நீண்ட காலமாக அவர் ருசித்து வந்த வெற்றிகளின் இன்னொரு எதிர்ப்பக்கமாக அவருக்கு சமீபத்திய காலக்கட்டம் உள்ளது. இப்போது தோனி சந்தித்து வரும் நிலையில் நானும் இருந்திருக்கிறேன். லேசாக பார்ம் சரிவு ஏற்பட்டால் கூட பெரிய விமர்சனங்கள் எழும். எனினும் அதனை எப்படிக் கையாள்கிறோம் என்பதில்தான் சுவாரசியம் அடங்கியுள்ளது.
ஆனால் விரைவில் நிலைமை தலைகீழாக மாறும். இந்த கிரிக்கெட் ஆட்டத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்னவெனில் சாம்பிய வீரர்களை எப்போதும் ஓரங்கட்டி விடாதீர்கள் என்பதே. மீண்டும் எழுச்சி பெற அவர்கள் வழிகளைக் கையாளக்கூடிய திறமைப் படைத்தவர்கள். நிச்சயம் அணிக்காக சில போட்டிகளை இவர்கள் வெற்றிபெற்றுத் தருவார்கள்.
நடுக்களத்தில் களமிறங்குவதன் மூலம் தோனி இன்னிங்ஸை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இங்கிலாந்தில் இதுதான் தேவைப்படும்.
தோனிக்குப் பதில் ஸ்மித்தை கேப்டனாக்கியது பற்றி…
தோனியையும் அவரது வயதையும் வைத்து யோசித்துப் பார்க்கும் போது இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம். ஆனால் இதைக் கூறுவதற்கான அடிப்படை எதுவும் என்னிடம் இல்லை. இப்படியிருக்கையில் அவர் தன் கிரிக்கெட் வாழ்வின் இறுதிக்கு வரவில்லை எனும்போது அவரைக் கேப்டன்சியிலிருந்து விலக்கியிருப்பது விசித்திரமானதாகவே படுகிறது.
இவ்வாறு கூறினார் பாண்டிங்.