எனது மனநலத்தை சந்தேகிப்பதா?- நீதிபதி கர்ணன் காட்டம் C
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு மனநல சோதனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இதில் கடும் கோபமும் ஏமாற்றமுமடைந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், நீதிபதிகள் அமர்வின் முடிவை வழக்கத்துக்கு விரோதமானது, கேலிக்கூத்தானது என்று சாடினார்.
இம்மாதம் 4-ம் தேதி கர்ணனுக்கு மருத்துவ சோதனை செய்து மே 8-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், “நானா மனநிலை சரியில்லாதவன்? எனக்கு மனநோய் இருப்பதாக தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யார்?
என்னுடைய வழக்கை விசாரித்து வரும் 7 நீதிபதிகளும் ஊழல்வாதிகள். எனவே என்னுடைய சம்மதம் இல்லாமல் டிஜிபி செயல்பட்டால் நான் அவருக்கு எதிராக உத்தரவு வழங்குவேன். அவர் தன் வரம்புக்குட்பட்டு செயல்பட வேண்டும். எந்த சிகிச்சை உத்தரவுக்கும் அடிபணிய மாட்டேன்.
பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் மற்ற ஊழல் நீதிபதிகளை இந்த 7 நீதிபதிகளும் காக்கின்றனர். இந்த தவறான உத்தரவு செயல்படுத்தப் பட கூடாதது. டிஜிபி என்னிடம் வரக்கூடாது” என்றார்.