காஷ்மீரில் கல்வீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு பணம்; என்ஐஏ வலையில் வணிகர்கள் சிக்கினர்
காஷ்மீரில் அமைதியின்மையை நீடித்து இருக்கசெய்ய பாகிஸ்தான் உளவு அமைப்பு வன்முறையை தூண்டிவிட பயங்கரவாதிகள் மற்றும் கல்வீச்சாளர்களுக்கு பணம் செலவு செய்கிறது. இந்திய பாதுகாப்பு படை எல்லை நகர்வுகளை தீவிரமாக கண்காணிக்கிறது. பயங்கரவாத ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகிறது. ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னரும் கல்வீச்சாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரங்கள் தொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு பிரிவின் பிடியில் எல்லையில் வணிகம் மேற்கொள்ளும் வணிகர்கள் சிக்கிஉள்ளனர்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே செயல்படும் வணிகர்களை தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வணிகர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்போது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து எப்படி பணம் வருகிறது என்பதை தேசிய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்து உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் கல் வீச்சாளர்களுக்கு பணத்தை கொண்டு சேர்க்க எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை பயன்படுத்த முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியை அதன் உளவுத்துறை ஐஎஸ்ஐ நியமித்து உள்ளது.
எல்லையில் இருநாடுகள் இடையே வணிகம் செய்யும் சுமார் 667 வணிகர்கள் பாகிஸ்தான் ரேடாரில் இருக்க வாய்ப்பு உள்ளது. தேசிய புலனாய்வு பிரிவும் அவர்களிடம் இது தொடர்பாக விசாரித்து இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. பணத்தை காஷ்மீரில் உள்ள ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் ஹுரியத் தலைவர்களுக்கு கொடுக்க பாகிஸ்தான் உளவுத்துறை பயன்படுத்தி இருக்கலாம் என்பது தொடர்பாக சுமார் 6, 7 வணிகர்கள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். இந்த வணிகர்கள் இடம்பெற்று இருக்கும் நிறுவனங்கள் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு பணம் வழங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.