சிவப்பு சுழல் விளக்குகளை அகற்றுவதால் ஏழைகளின் வயிறு நிறைய போகிறதா? கர்நாடக மந்திரி கேள்வி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நேற்று உணவுத்துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மாநில முதல்–மந்திரிகள், மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தங்கள் கார்களில் உள்ள சிவப்பு சுழல் விளக்கை அகற்றும்படி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சில மந்திரிகள் மற்றும் மாநில முதல்–மந்திரிகள் தங்கள் கார்களில் உள்ள சிவப்பு சுழல் விளக்குகளை அகற்றி வருகின்றனர். சுழல் விளக்குகளை காரில் வைத்துக் கொள்ளாமல்? தலையிலா வைத்து கொள்ள முடியும்?. அதை அகற்றுவதால் என்ன பயன் உள்ளது. அவற்றை அகற்றுவதன் மூலம் ஏழைகளின் வயிறு நிரம்பி விடுமா?.
கார்களில் உள்ள சிவப்பு சுழல் விளக்குகளை அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை. மேலும் சுழல் விளக்குகளை பொருத்துவதும், அகற்றுவதும் மந்திரிகளின் கையில் இல்லை. இதுகுறித்து மாநில அரசு உத்தரவிடும் வரை காரில் இருந்து நான் சிவப்பு சுழல் விளக்கை அகற்றப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டால் மட்டுமே சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்படும் எனவும் குறிப்பிட்டு உள்ளார் யு.டி.காதர்.
முந்தைய தகவல்
மத்திய அரசு முடிவு எடுத்ததுமே எல்லா மாநிலங்களிலும் இது தொடர்பான நடவடிக்கை தொடங்கியது. ஆனால் கர்நாடகம் மட்டும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி சித்தராமையா கடந்த 25-ம் தேதி பேசுகையில், உத்தரவு எப்போது அமலுக்கு வருகிறதோ அப்போதுதான் சிவப்பு சுழல் விளக்கை அகற்றுவேன் என்றார். “இப்போது நான் ஏன் சிகப்பு சுழல் விளக்கை அகற்ற வேண்டும்? மே மாதம் எனது காரில் இருந்து சிகப்பு சுழல் விளக்கு அகற்றப்படும். உத்தரவு எப்போது அமலுக்கு வருகிறதோ அப்போதுதான் அகற்றுவேன்,” என கூறினார். இதற்கு அம்மாநில அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.