Breaking News
கோடையின் உச்சம்: அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்

கோடையின் உச்சம் என்று சொல்லப்படுகிற அக்னி நட்சத்திரம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வழக்கத்தை விட வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயிலின் தாக்கம்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 2-வது வாரத்தில் பல நகரங்களில் 100 டிகிரி என்ற அளவை எட்டியது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் பதிவாகியிருந்தது.

இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணியில் இருந்தே வெயிலின் தாக்கத்தை உணர முடிந்தது. சாலைகளில் ஆங்காங்கே கானல் நீர் காணப்பட்டது. மதிய நேரங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. மாலை வேளைகளில் மட்டும் பூங்காக்கள், கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்று வந்த காட்சிகளை பார்க்க முடிந்தது.

வெயிலுக்கு இதமான தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் போன்றவற்றின் விற்பனையும் களை கட்டியது. மாதவரம், செங்குன்றம், மயிலாப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் நுங்கு விற்பனை அமோகமாக இருந்தது. சிலர் தங்கள் வீடுகளில் எலும்பிச்சை பழத்தை ஜூஸ் செய்து பருகினர்.

அக்னி நட்சத்திரம்

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.

இந்த நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோடை மழை பெய்து, அக்னியை தணித்து, மக்கள் வயிற்றில் பாலை வார்த்தது. இந்த ஆண்டும் அதுபோன்று கோடை மழை வந்து, அக்னியை குளிர்விக்குமா? என்பது போக போக தான் தெரியும்.

அக்னி நட்சத்திரம் இருக்கும் நாட்களில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, ‘வெயில் காலத்தில் திட உணவை காட்டிலும் திரவ வகை உணவுகளை அதிகளவில் சேர்க்க வேண்டும். அதிகம் காரம் உள்ள உணவு வகைகளையும், மாமிச உணவுகளையும் தவிர்க்க வேண்டும். கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள தரம் இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி, பருகுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அதனை தவிர்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

ஈரப்பதம் குறைந்து வறண்ட வானிலை காணப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கும். கடந்த 10 நாட்களில் வழக்கத்தை விட 2 முதல் 6 டிகிரி வரை வெப்பம் அதிகமாக பதிவானது.

சென்னையை பொறுத்தவரை கோடை மழைக்கு வாய்ப்பில்லை. அனல் காற்று வீசும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டத்தில் காற்றின் திசையை பொறுத்து வெப்பநிலை மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.