Breaking News
டெல்லியில், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

டெல்லியில், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. நடிகர்கள் மோகன்லால், அக்‌ஷய் குமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விருது பெற்றனர். இயக்குனர் கே.விஸ்வநாத், தாதாசாகேப் பால்கே விருது பெற்றார்.

தேசிய விருதுகள்
கடந்த ஆண்டுக்கான 64–வது தேசிய திரைப்பட விருதுகளுக்காக, 344 திரைப்படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பிரபல இயக்குனர் பிரியதர்‌ஷன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு, விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுத்து கடந்த மாதம் அறிவித்தது.

இந்நிலையில், இந்த விருதுகள் வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்கினார். மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, மத்திய இணை மந்திரி ராஜ்யவர்த்தன் ரத்தோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கே.விஸ்வநாத்
திரைப்பட துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு வழங்கப்பட்டது. அப்போது, அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

பிரபல நடிகர் அக்‌ஷய் குமார், ‘ரஸ்டம்’ என்ற படத்துக்காக சிறந்த நடிகர் விருது பெற்றார். ‘மின்னாமினுங்கு’ என்ற மலையாள படத்துக்காக, சுரபி ஜோதி சிறந்த நடிகை விருது பெற்றார். ‘வென்டிலேட்டர்’ படத்துக்காக ராஜேஷ் மபுஸ்கர் சிறந்த இயக்குனர் விருது பெற்றார்.

சிறந்த இந்தி படத்துக்கான விருது, ‘நீரஜா’ படத்துக்கும், அதில் நடித்த சோனம் கபூருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டன. சிறந்த பொழுதுபோக்கு படமாக ‘சாத்தமனம் பாவதி’ விருது பெற்றது. சிறந்த இசையமைப்பாளர் விருது, பாபு பத்மநாபாவுக்கு (அல்லமா) வழங்கப்பட்டது.

தமிழ் படங்கள்
சிறந்த தமிழ் படத்துக்கான விருது, ‘ஜோக்கர்’ படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை அப்படத்துக்காக சுந்தர அய்யர் பெற்றார். நடிகர் சூர்யா நடித்த ‘24’ படம், சிறந்த வடிவமைப்புக்கான விருது பெற்றது.

‘தர்மதுரை’ படத்தின் பாடலுக்காக கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார். சிறந்த திரைப்பட விமர்சகர் விருது, ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது.

மோகன்லால்
‘புலிமுருகன்’, ‘ஜனதா கேரேஜ்’, ‘முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்’ ஆகிய படங்களில் நடித்ததற்காக, நடிகர் மோகன்லால், சிறப்பு நடுவர் விருதை பெற்றார்.

‘புலிமுருகன்’ படத்துக்காக, சிறந்த சண்டைப்பயிற்சி இயக்குனர் விருதை பீட்டர் ஹெயின் பெற்றார். சமூக பிரச்சினைகளை வலியுறுத்தும் படத்துக்கான விருது, ‘பிங்க்’ படத்துக்கும், சிறந்த குழந்தைகள் பட விருது ‘தானக்’ படத்துக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகராக மனோஜ் ஜோஷி, சிறந்த துணை நடிகையாக சாய்ரா வாசிம் (தாங்கல்) விருது பெற்றனர். சிறந்த ஸ்பெ‌ஷல் எபெக்ட்டுக்கான விருது, ‘ஷிவாய்’ படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருது, ‘மகேஷின்டே பிரதிகாரம்’ படத்துக்காக ஷ்யாம் புஷ்கரனுக்கு வழங்கப்பட்டது.

ஒப்பனைக்கான விருது, எம்.ராமகிருஷ்ணாவுக்கும், படத்தொகுப்பாளர் விருது ராமேஷ்வர் பகத்துக்கும், ஒலி வடிவமைப்பாளர் விருது ஜெயதேவனுக்கும், சிறந்த பின்னணி பாடகி விருது இமான் சக்ரவர்த்திக்கும் வழங்கப்பட்டன.

முழு நியாயம்
இந்த விழாவில் பேசிய விருது தேர்வுக்குழு தலைவர் பிரியதர்‌ஷன், ‘விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்வதில் முழு நியாயம் செய்திருக்கிறோம். தேர்வுக்குழுவின் முடிவு மதிக்கப்பட வேண்டும்’ என்றார்.

விழாவுக்கு இடையே அவ்வப்போது பாடல்கள் பாடப்பட்டன. தமிழ் பாடலும் பாடப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.