விமான பயணத்துக்கு ‘ஆதார்’ கட்டாயம் ஆகிறது பயணி கையை ‘ஸ்கேன்’ செய்துதான் விமான நிலையத்துக்குள் நுழைய முடியும்
விமான பயணத்துக்காக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கிறபோது, ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் நுழைவுமுனைகளில் வைக்கப்பட்டுள்ள எந்திரம் மூலம் பயணிகள் தங்களது கையை ‘ஸ்கேன்’ செய்து கொள்ள வேண்டியது வரும்.
ஒத்துப்போனால் பயணம்
ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்கிறபோதே, பயணிகளின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு விடுவதால், ஆதாருக்காக பதிவு செய்து வைத்துள்ள கை ரேகையும், இப்போது ஸ்கேன் செய்கிற பயணியின் கைரேகையும் ஒத்துப்போகிறதா என்பது தெரிய வந்துவிடும். ஒத்துப்போனால்தான், விமான நிலையத்துக்குள் நுழையவும், பயணம் செய்யவும் முடியும்.
இதன்மூலம் ஒருவர் பாஸ்போர்ட்டில் இன்னொருவர் புகைப்படத்தை ஒட்டி மோசடி செய்து, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவது எல்லாம் இனி சாத்தியம் இல்லாமல் போய்விடும்.
டெல்லியில் அமல்
இந்த திட்டம் இப்போது சோதனைரீதியில் ஐதராபாத் விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஒரு தனியார் விமான பயணத்துக்கு மட்டும் இது அமலில் உள்ளது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இது சோதனைரீதியில் அமலாக உள்ளது.
இதுபற்றி சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஆதார் பதிவு செய்கிறபோதே சம்பந்தப்பட்ட நபரின் படம், கைரேகைகள் பெறப்பட்டு விடுகின்றன. விமான நிலைய நுழைவு முனைக்கு பயணிகள் வந்து அவர்களது கையை ஸ்கேன் செய்கிறபோதே, திரையில் ஆதார் பதிவு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தோன்றும். அதில் உண்மையான பயணிதானா என்பது தெரியவந்துவிடும். கை ஸ்கேன் செய்கிறபோது, ஏற்கனவே ஆதார் பதிவின்போது பெறப்பட்ட கை ரேகை பதிவுடன் ஒப்பிட்டு அதுவும் பயணியின் அடையாளத்தை உறுதி செய்துவிடும்’’ என்றார்.
விரிவுபடுத்தப்படும்
இந்த திட்டம், விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு விடும்.