கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விழாவாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் ஜூலை 3 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விழாவாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து திமுக எம்.பி., கனிமொழி அழைப்பு விடுத்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்களின் இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல், அடுத்து வரும் தேர்தல்கள் உள்ளிட்டவைகள் குறித்த பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பாட்னாவில் நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் ஆகியோரை சந்தித்து கனிமொழி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இன்று (மே 06) காங்., தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களையும் கனிமொழி சந்திப்பார் என கூறப்படுகிறது. கனிமொழி நேரிலும், ஸ்டாலின் போன் மூலமாகவும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இவ்விழாவில் கலந்து கொள்ள நிதிஷ்குமாரும், லாலு பிரசாத்தும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.