Breaking News
வலுவான மும்பை அணியுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா டெல்லி

ரிஷப் பந்த், சாஞ்சு சாம்சன் ஆகியோரால் புத்துணர்ச்சி பெற்றுள்ள டெல்லி டேர்டெல்லிஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது.

பெரோஷா கோட்லா மைதானத் தில் அடுத்தடுத்து இரு ஆட்டங் களில் பெரிய அளவிலான இலக்கை வெற்றிகரமாக துரத்தி வெற்றி கண்டுள்ள டெல்லி அணி, திடீரென மற்ற அணிகளின் தோற்றத்தில் இருந்து மாறுப்பட்டுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றியின் தருணங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் விளையாடக் கூடும் என கருதப்படுகிறது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 209 ரன்கள் இலக்கை துரத்தி சாதனை படைத்ததில் ரிஷப் பந்த் பெரிய அளவில் உதவினார். இந்த ஆட்டத்தில் அவர் 43 பந்துகளில் 97 ரன்கள் விளாசி மிரட்டினார்.

அவர் தனது அதிரடி ஆட்டத்தால் ஒரே நாள் இரவில் இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக அவர் உருவெடுப்பார் என கருதப்படும் நிலையில் சச்சின், கங்குலி, சேவக் உள்ளிட்ட ஜாம்பவான்கள் ரிஷப் பந்த்தை வெகுவாக பாராட்டி உள்ளனர்.

ரிஷப் பந்த்தை பாராட்டும் அதே வேளையில் சஞ்சு சாம்சனையும் மறந்துவிட முடியாது. அவர் 31 பந்துகளில் 61 ரன்கள் விளாசி யதுடன் ரிஷப்புடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான பாதை யையும் அமைத்துக் கொடுத்தார்.

இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி டாஸ் வெல்லும் பட்சத்தில் பீல்டிங்கையே தேர்வு செய்யும். ஏனெனில் அந்த அணி சொந்த மைதானத்தில் கடந்த இரு ஆட்டங்களிலும் முறையே 186, 209 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தி வெற்றி கண்டுள்ளது.

டெல்லி அணியின் முன்பு கடும் சவால்கள் காத்திருக்கின்றன. 10 ஆட்டத்தில் 4 வெற்றி பெற்றுள்ள அந்த அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சி உள்ள 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றில் கால்பதிக்க முடியும். முழு உடல் தகுதியை பெறாததால் ஜாகீர்கான் களமிறங்குவது உறுதி செய்யப்படவில்லை.

பொறுப்பு கேப்டனாக செயல் படும் கருண் நாயர், மற்ற பேட்ஸ் மேன்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் முனைப்புடன் செயல்பட துடிப்பது அணிக்கு உத்வேகத்தை கொடுப்பதாக உள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 10 ஆட்டத்தில், 8 வெற்றி, 2 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. எனினும் எஞ்சியுள்ள ஆட்டங்களிலும் அந்த அணி சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிக்கும்.

மும்பை அணியின் இரு தோல்விகளும் புனே அணிக்கு எதிரானவையே. முதல் கட்ட ஆட்டத்தில் மற்ற 6 அணிகளையும் மும்பை அணி பந்தாடியுள்ளது. எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுவதாலேயே அந்த அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரோஹித் சர்மா கடந்த 3 ஆட்டங்களில் இரு அரை சதங்கள் அடித்துள்ளார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இந்த சீசனில் 15 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள மெக்லீனகன், வேகப் பந்து வீச்சில் பலம் சேர்க்கிறார்.

முன்னணி வீரரான மலிங்கா, அதிக ரன்களை விட்டுக்கொடுக் கிறார். இந்த விஷயத்தில மட்டுமே அந்த அணி முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளது. சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் தனது அனுபவத்தால் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துபவராக உள்ளார். இந்த சீசனில் அவர் ஓவருக்கு சராசரியாக 5.86 ரன்கள் மட்டுமே வழங்கி இருக்கிறார்.

இடம்: டெல்லி

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.