பரோட்டா போட ஹீரோவை அனுப்பிய பாலா! – ஆர் ஆனந்த், ஏ.ஆர். சூரியன்
தமிழ் சினிமாவில் தற்போது தம்பதி இயக்குநர்கள் என்றால் புஷ்கர் காயத்ரி. இயக்குநர்கள் இணை என்றால் ஜேடி.ஜெர்ரிக்குப் பிறகு யாரும் இல்லை என்ற நிலையை மாற்ற வந்திருக்கிறார்கள் ஆர். ஆனந்த், ஏ.ஆர். சூரியன் ஆகிய இருவரும். ‘சாட்டை’ யுவன், பெரோஸ்கான், பானுச்சந்தர் நடிக்கும் ‘விளையாட்டு ஆரம்பம்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்தபோது…
இந்தக் காலத்தில் இரண்டு நண்பர்கள் இணைந்து ஒரு படத்தை இயக்குவது ஆச்சரியமாக இருக்கிறதே?
உண்மைதான். சினிமா என்றில்லை. எந்தக் கலைத்தொழிலிலும் திறமையைத் தனித்து வெளிப்படுத்திப் புகழ்பெற வேண்டும் என்று நினைப்பதுதான் கலைஞர்களில் மனம். சினிமாவிலோ கேட்கவே வேண்டாம். ஈகோ இல்லாமல் இங்கே எதுவுமே இருக்காது. ஆனால், உண்மையான நட்பை உணர்ந்துகொண்டுவிட்டால் ஈகோவுக்கு இடமிருக்காது. என்னையும் சூரியாவையும் இணைத்தது சினிமாதான். அவர் ஜேடி.ஜெர்ரியிடம் பணியாற்றியவர். நான் ஆபாவாணன், அருண்பாண்டியன் ஆகியோரிடம் பணியாற்றியவன். ஐங்கரன் பட நிறுவனத்துக்கு புரடெக்ஷன் கண்ட்ரோலராகப் பணியாற்றினேன். அப்போதுதான் சூர்யா எனக்கு நண்பரானார். ‘தம்பி அர்ஜூனா’என்ற லாபகரமான படத்தை இதற்குமுன் நான் இயக்கியிருக்கிறேன். சூர்யாவுக்கு இதுவே முதல்படம்.
‘விளையாட்டு ஆரம்பம்’ என்ற தலைப்பு அஜித் படத்துக்குப் பரிசீலனையில் இருந்தது… அந்தத் தலைப்பை உங்கள் படத்துக்கு ஏன் வைத்தீர்கள்?
கதைதான் காரணம். சொந்தத் தொழில்செய்து முன்னேற நினைக்கிற நாயகனுக்கும் அதைத் தடுக்க நினைக்கும் உயர் காவல் அதிகாரி ஒருவருக்கும் நடக்கும் வணிக விளையாட்டுதான் இந்தப் படம். நாயகனாக ‘சாட்டை’யுவனும் காவல் அதிகாரியாக பெரோஸ்கானும் நடித்திருக்கிறார்கள். ‘சதுரங்க வேட்டை’யைவிட ஒரு மடங்கு விறுவிறுப்பான முடிச்சுக்களைக் கொண்ட திரைக்கதையைப் படமாக்கியிருக்கிறோம். ‘சதுரங்க வேட்டை’யில் ஆன்லைன் வர்த்தகத்தின் எதிர்மறையான விஷயங்களைப் பதிவு செய்தார்கள். நாங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள நிறைவான விஷயங்களை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறோம்.
‘சாட்டை’ யுவனை ஏன் தேர்வு செய்தீர்கள்?
இரண்டு காரணங்கள் இருந்தன. இது சொந்தக் காலில் நின்று முன்னேற நினைக்கும் இளைஞர்களுக்கு ஊக்கம்தரும் மோட்டிவேஷனல் ஸ்கிரிப்ட். அதற்குத் துறுதுறுவென்ற இளைஞன் தேவை. யுவன் மிகப் பொருத்தமாக இருந்தார். மென்பொருள் துறையில் ஏற்படும் திடீர் வேலையிழப்பால் சுயதொழிலில் இறங்கும் கதாநாயகனுக்கு வரும் வினோதமான சவாலை எதிர்கொள்ளும் இளமையும் ஒரு காவல் அதிகாரியை உடல்ரீதியாகவும் எதிர்த்துச் சண்டை செய்யும் வேகமும் நாயகனுக்குத் தேவை. யுவன் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியவர். சண்டைக்காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதற்கு அப்படியே நேர்மாறாகக் காதல் காட்சிகளிலும் விளையாடியிருக்கிறார்.
இரண்டாவது காரணம் இயக்குநர் பாலாவின் அலுவலக வட்டாரத்தில் கேள்விப்பட்டது. ‘நாச்சியார்’ படத்துக்குப் பிறகு பாலா இயக்கவிருக்கும் படத்துக்கு யுவனை நாயகனாகத் தேர்வு செய்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்காக பரோட்டா போடும் வேலையை நாகூரில் ஒருமாதம் தங்கிக் கற்றுக்கொண்டு வா என்று யுவனைத் தனது உதவியாளர்களுடன் அனுப்பிவைத்திருக்கிறார். யுவனோ பரோட்டா போடுவது, பறந்துவரும் பரோட்டாவை பிடிப்பது எனப் பல டெக்னிக்குகளை ஒரே வாரத்தில் கற்றுக்கொண்டு திரும்பி வந்திருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்டதும் யுவன்மீது இன்னும் நம்பிக்கை வந்து அவரை நாயகன் ஆக்கினோம். அவர் சிறந்த நாயகனாக வருவார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். இவர் ‘பகிரி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். தெலுங்குப் படவுலகில் வளர்ந்துவரும் நாயகி. இவர்களுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஜா நடித்திருக்கிறார்.
படத்தின் கதை எங்கே நடக்கிறது?
மதுரையில் மையம் கொள்ளும் கதை திருச்சி, நாமக்கல் எனப் பயணப்பட்டு சென்னையில் முடிகிறது. அந்தந்த ஊர்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். காந்த் தேவா இசை. பாடல் காட்சிகளை சென்னையிலும் பாங்காக்கிலும் பிரம்மாண்டமாகப் படமாக்கியிருக்கிறோம்.