Breaking News
கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை இருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்பட்டன.
அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா தூங்காவி கிராமத்தைச் சேர்ந்த டி.விக்னேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மதுபான கடை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நெடுஞ்சாலைக்கு அருகே இருந்த டாஸ்மாக் மதுபான கடையை, தூங்காவி கிராமத்துக்குள் இடம் மாற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இருக்கிறார். தற்போது புதிதாக திறக்கப்பட உள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடை அருகே, பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், வங்கி ஆகியவை உள்ளன.

இதனால் அங்கு மதுபான கடை திறந்தால், குடிகாரர்களால், பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். விதிமுறைகள் அனைத்தையும் மீறி, இந்த பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எங்கள் கிராமசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது.

சட்டம்–ஒழுங்கு பிரச்சினை
இந்த தீர்மான நகலை கலெக்டருக்கு அனுப்பியும் எந்த பயனும் இல்லை. மதுபான கடையில் மது அருந்தும் நபர்களால், எங்கள் பகுதியில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தூங்காவி கிராமத்தில் மதுபான கடையை திறக்க மாவட்ட கலெக்டருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதே கோரிக்கையுடன், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 10–க்கும் மேற்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் கோடை விடுமுறை கோர்ட்டில், நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–

போலீஸ் தடியடி
பள்ளிக்கூடங்கள், கோவில்கள், வர்த்தக நிறுவனங்கள் அருகிலும், குடியிருப்பு பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பலர் இந்த வழக்குகளை தொடர்ந்து உள்ளனர். பள்ளிக்கூடங்கள், கோவில்கள் அருகிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மதுபான கடைகளை திறக்க கூடாது என்ற கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.

ஆனால், பொதுமக்கள் எதிர்க்கும் இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அரசு அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இந்த அதிகாரிகளுக்கு, தமிழக போலீசார் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். மதுபான கடைகளை திறக்கக் கூடாது என்று போராடும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்துகின்றனர்.

பெண்கள் போராட்டம்
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி, ‘போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள், பொதுஅமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்துபவர்கள் ஆகியோர் மீது தான் போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்’ என்று கூறுகிறார்.

ஆனால், பத்திரிகைகளில் வரும் செய்திகள், இந்த ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, மதுபான கடைகளுக்கு எதிராக பெண்கள் தான் தொடர்ச்சியாகவும், கடுமையாகவும் போராட்டம் நடத்தி வருவது தெரிகிறது. ஏனென்றால்? மதுவின் கொடுமையினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். அதனால், அவர்கள் தொடர் போராட்டத்தை நடத்துகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையை, அரசு அதிகாரிகள் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும்.

திறக்க கூடாது
பொதுமக்களின் உணர்வுகளுக்கு அரசு அதிகாரிகள் மதிப்பு அளிக்க வேண்டும். அதற்கு மாறாக, குடும்பங்களை சிதைத்து அழிக்கும் மதுபான கடைகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது. அதாவது மதுபான கடைகளை இடமாற்றவும், புதிய கடைகளை திறக்கவும் அரசு அதிகாரிகள் ஆர்வம் காட்டக் கூடாது. எனவே, இந்த சூழ்நிலையில், கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறோம்.

குடியிருப்பு பகுதிகளுக்குள் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது. தங்களது கிராமத்துக்குள் மதுபான கடை திறக்க கூடாது என்று கிராம சபைகளில் தீர்மானம் இயற்றப்பட்டால், அந்த கிராமங்களில் மதுபான கடைகளை திறக்க கூடாது. இதுபோல உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் இயற்றினால், நகரம், கிராமம் ஆகிய பகுதிகளில் மதுபான கடைகளை திறக்க கூடாது.

கைது செய்ய வேண்டாம்
டாஸ்மாக் மதுபான கடைகளை தங்களது பகுதிகளில் திறக்க கூடாது என்று ஜனநாயக முறையில், அமைதி வழியில் போராட்டம் நடத்தும் நபர்களை போலீசார் கைது செய்யவும் கூடாது. அவர்கள் மீது தடியடி உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது.

இந்த வழக்குகளின் விசாரணையை தள்ளி வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.