Breaking News
பாகிஸ்தான் வாலிபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி என்னை திருமணம் செய்தார் -இந்திய பெண் புகார்

டெல்லியை சேர்ந்த இளம் பெண் டாக்டர் உஸ்மா (வயது 20). பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்தவர் தாகிர் அலி. இருவரும் மலேசியாவில் சந்தித்தபோது, காதல் வயப்பட்டனர்.

இதையடுத்து, கடந்த 1–ந் தேதி, உஸ்மா, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு 3–ந் தேதி, தாகிர் அலிக்கும், அவருக்கும் திருமணம் நடந்தது. 5–ந் தேதி, தாகிர் அலிக்கு விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காக, இருவரும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்றனர். அங்கு விசாரணைக்காக, ஒரு அறைக்குள் சென்ற உஸ்மா, நீண்ட நேரமாக திரும்ப வராததால், தாகிர் அலி அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், உஸ்மா அங்கு இல்லை என்று கூறினர். உடனே, தாகிர் அலி, போலீசில் புகார் செய்தார்.

இதுபற்றி போலீசார் விளக்கம் கேட்டபோது, உஸ்மா இந்தியாவுக்கு திரும்பி செல்ல விரும்புவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.

கோர்ட்டில் வாக்குமூலம்

இந்நிலையில், நேற்று இந்த விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டது. தாகிர் அலிக்கு எதிராக இஸ்லாமாபாத் கோர்ட்டில் உஸ்மா புகார் மனு கொடுத்தார். மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் வாக்குமூலமும் அளித்தார்.

வாக்குமூலத்தில் அவர் கூறி இருந்ததாவது:–

நான் தாகிர் அலியை திருமணம் செய்வதற்காக, பாகிஸ்தானுக்கு வரவில்லை. அவரும், நானும் நண்பர்கள். அவரையும், பாகிஸ்தானையும் பார்ப்பதற்காகவே விசா எடுத்து வந்தேன்.

ஆனால், தாகிர் அலியும், அவருடைய நண்பர்களும் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டினர். சித்ரவதை செய்தனர். அதனால் வலுக்கட்டாயமாக இந்த திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தாகிர் அலி என்னை கற்பழித்தார். எனது பயண ஆவணங்களையும் பறித்துக்கொண்டனர்.

திருமணம் ஆனவர்

மேலும், தாகிர் அலி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், 4 குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரிய வந்தது. அவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்றும், மலேசியாவில் தொழிலாளியாக வேலை பார்த்தவர் என்றும் தெரிந்துகொண்டேன். அவற்றையெல்லாம் அவர் என்னிடம் மறைத்து விட்டார்.

அவருடைய குடும்பத்தினர் பேசும் மொழியையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி டெல்லியில் உள்ள என் சகோதரரிடம் கூறியபோது, அவர் இந்திய தூதரகத்தை அணுகுமாறு கூறினார். இந்திய தூதரக அதிகாரி அத்னன் என்பவரிடமும் பேசி உஷார்படுத்தினார்.

அதன்படி, நான் இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தேன். நான் இந்தியாவுக்கு பத்திரமாக திரும்பிச் செல்ல வேண்டும். அதற்கு உத்தரவாதம் அளித்தால்தான், தூதரகத்தில் இருந்து வெளியேறுவேன்.

இவ்வாறு உஸ்மா கூறியுள்ளார்.

கோர்ட்டு நோட்டீசு

உஸ்மாவின் மனு அடிப்படையில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. உஸ்மாவை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்போவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள உஸ்மாவின் குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டுள்ளது.

இதற்கிடையே, தாகிர் அலி நேற்று இந்திய தூதரகத்துக்கு சென்று உஸ்மாவை சந்தித்தார். ஆனால், கோர்ட்டுக்கு வரவில்லை.

உஸ்மா, பாகிஸ்தானை சுற்றி பார்க்கவே விசாவுக்கு விண்ணப்பித்ததாகவும், திருமண திட்டம் எதையும் குறிப்பிடவில்லை என்றும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகமும் உறுதி செய்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.