ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த நிலையில் டெல்லி – குஜராத் அணிகள் இன்று மோதல்
ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த நிலையில் குஜராத் லயன்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி கான்பூரில் இன்று நடக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை குஜராத் அணி, சில தினங்களுக்கு முன்பே இழந்தது. இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வென்று, ஹைதராபாத் அணி 15 புள்ளிகளைப் பெற்றதால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை நேற்று முன்தினம் இழந்தது. இந்நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் – குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கான்பூரில் இன்று நடக்கிறது.
இளம் இந்திய வீரர்களை பேட்ஸ்மேனாகக் கொண்டுள்ள டெல்லி அணி, இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்தே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளது. சில போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடுவதும், அதே நேரத்தில் அடுத்த போட்டியிலேயே சொதப்பலாக ஆடுவதும் அந்த அணியின் வாடிக்கையாக உள்ளது.
இந்த தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாவிட்டாலும், டெல்லி அணியின் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு சிறப்பான எதிர்காலத்தை இந்த தொடர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குறிப்பாக தோனி ஓய்வுபெற்ற பிறகு, இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பந்த் இருப்பார் என்பதை தேர்வுக்குழு மறைமுகமாக சொல்லும் அளவுக்கு இந்த தொடரில் அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அதிலும் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் பந்த் குவித்த 97 ரன்கள், டெண்டுல்கர், திராவிட்போன்ற ஜாம்பவான்களிடம் பாராட்டை பெற்றுக்கொடுத்துள்ளது. அதே போன்ற ஆட்டத்தை இன்று குஜராத் அணிக்கு எதிராக மீண்டும் வெளிப்படுத்த பந்த் முயலக் கூடும். சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், கருண் நாயர், கிறிஸ் மோரிஸ் ஆகியோரும் கைகொடுக்கும் பட்சத்தில் இன்றைய போட்டியிலும் வென்று டெல்லி அணி தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்துவரும் குஜராத் அணி, தனது முந்தைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் அதிக நம்பிக்கையுடன் உள்ளது. அதே நேரத்தில் கடந்த முறை தங்களை தோற்கடித்த டெல்லி அணியை இம்முறை வென்று கணக்கை நேர் செய்துகொள்ளும் ஆவலிலும் அந்த அணி உள்ளது.
குஜராத் அணியைப் பொறுத்தவரை சுரேஷ் ரெய்னா, டுவைன் ஸ்மித், பின்ச், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், ஜடேஜா என்று மிகப்பெரிய பேட்டிங் வரிசை இருக்கிறது. ஆனால் பந்துவீச்சில் அந்த அணி சுமாராகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காயம் காரணமாக ஆன்ட்ரூ டை ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய பிறகு அதன் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. அதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் பட்சத்தில் அந்த அணி முதலில் பீல்டிங்கையே தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி டேர்டேவில்ஸ்: ஜாகீர் கான் (கேப்டன்), முகமது ஷமி, சபாஷ் நதீம், ஸ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிராத் வெயிட், ஷமா மிலிந்த், கிறிஸ் மோரிஸ், கருண் நாயர், பிரதியுஷ் சிங், ரிஷப் பந்த், சாம் பில்லிங்ஸ், சஞ்சு சாம்சன், ஆதித்யா தாரே, சயத் ஹலீத் அகமது, கோரே ஆண்டர்சன், மேத்யூஸ், ரபாடா, முருகன் அஸ்வின், பாட் கம்மின்ஸ், நவ்தீப் ஷைனி, அங்கீத் பாவ்னே, ஷசாங்க் சிங்.
குஜராத் லயன்ஸ்: சுரேஷ் ரெய்னா (கேப்டன்), பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சூரி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பின்ச், மன்பிரித் கோனி, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகதி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி, பிரவீன் குமார், முனாப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷேல்லே சவுர்யா, நது சிங், தேஜாஸ் பரோகா, ஆன்ட்ரூ டை.