ஆங்கிலத்தில் அரசு உத்தரவு வெளியிடுவது அதிகரிப்பு: தமிழ் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
தமிழக அரசுத் துறைகளில் சமீப காலமாக அரசால் வெளியிடப்படும் பெரும்பாலான உத்தரவுகள், தகவல்கள் ஆங்கிலத்தில் வரத் தொடங்கியுள்ளதால் தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் வெளியிடப்படும் அலுவலக ரீதியான பணியிட மாறு தல், காலிப் பணியிட அறிவிப்புகள், இதர செலவினங்களுக்கான அரசாணைகள் ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் வெளியிடப்படுகின்றன. ஆங்கிலம் முழுமையாக தெரியாத பணியாளர்கள் அரசாணையில் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் பரிந்துரைகள் குறித்து தெரியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். நன்கு ஆங்கிலம் தெரிந்தவர்களைத் தேடி கண்டுபிடித்து, அதன் அர்த்தம் தெரிந்துகொள்வதற்குள் நிர்வாக நடவடிக்கைகள் தாமதமாகின்றன.
இதனால், கடைநிலை ஊழியர்கள் நிர்வாக ரீதியான கண்டிப்புகளுக்கும், நடவடிக்கை களுக்கும் ஆளாவதாகக் கூறப்படு
கிறது. ஆங்கிலத்தில் வெளியிடுவ தால் ஒரு வார்த்தைக்கு வெவ்வேறு அர்த்தங்களைப் புரிந்துகொண்டு குழப்பத்துக்கும் ஆளாகின்றனர். சமீபத்தில் சுகாதாரத் துறையினரால் நடத்தப்பட்ட செவிலியர்கள் கலந்தாய்வுகளின்போது வெளியிடப்பட்ட உத்தரவுகள் அனைத்தும்
ஆங்கிலத்திலேயே வெளியிடப் பட்டிருந்தது. ஆங்கிலம் தேவைதான் என்றாலும், தமிழைப் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம் என தமிழ் ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக் கின்றனர்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் நீ.இளங்கோவன் கூறிய தாவது:
அனைத்து அரசுத் துறை செயல் பாடுகளையும் கண்காணித்து, எல்லா அரசாணைகளையும், அறிவுறுத்தல்களையும் தமிழ் மொழி யிலே வெளியிட தமிழ் வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுக்க வேண் டும். கல்வித் துறையின் அனைத்து செயல்பாடுகள், அரசு தேர்வுத் துறை செய்திகள் எல்லாவற்றையும் தமிழில்தான் அனுப்ப வேண்டும். தேர்வுத் துறை, சுகாதாரத் துறை சுற்றறிக்கை பெரும்பாலும் தற்போது ஆங்கிலத்தில் வருகிறது. கேரளா, கர்நாடகாவில் அந்த மாநில அரசுகள் அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால், தமிழகத்தில் தமிழ் மொழியின் முக்கியத்துவத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காமல் அமைதி காப்பது ஆபத்தானது.
திரைப்படத்துக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு கொடுக்கிற அரசு, வணிக நிறுவன கடைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் அவர்களுக்கு வரி விலக்கு கொடுத்து தமிழ் மொழி வளர்ச்சியையும் ஊக்குவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுகாதார செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறும்போது, “அரசாணைகள், தகவல்கள் ஆங்கிலத் தில் வெளியிடப்படுவதால் கிராமப் புற மக்கள் அரசின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகத்தில் தற்போது சுமார் 7,105 மொழிகள் உள்ளன. இதில் இந்தியாவில் மட்டுமே சுமார் 880 மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் தமிழ் மொழி செம்மொழியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அரசே தமிழை முழுமையாக பயன்படுத்தாத, அங்கீகரிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ 10 ஆண்டுகளுக்கு முன்பே விடுத்திருந்த எச்சரிக்கையில் உலக அளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழியும் வாய்ப்பு உள்ள மொழிகளில் தமிழ் மொழியும் இடம்பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளது. அவர்களின் கூற்று நிஜமாகிவிடுவது போலவே தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன” என்றார்.