வேலைநிறுத்தத்தால் பின்வாங்கியது ‘வனமகன்’: ஜுன் 23-ல் வெளியாகிறது
தமிழ் திரையுலகின் வேலைநிறுத்தத்தால் மே 19ம் தேதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி, ஜுன் 23ம் தேதி வெளியாகவுள்ளது ‘வனமகன்’
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வனமகன்’. சாயிஷா சைகல் நாயகியாக நடித்துள்ள படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள்ளும், தாய்லாந்து மற்றும் சென்னையில் சில முக்கிய காட்சிகளும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. ‘பேராண்மை’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
‘வனமகன்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து, தணிக்கைக்கு திரையிடப்பட்டது. மே 19ம் தேதி வெளியீடாக இருந்த படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கினார்கள். ஆனால், தமிழ் திரையுலகின் வேலைநிறுத்தத்தை முன்வைத்து மே 19ம் தேதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது.
தற்போது ஜுன் 23ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம் குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில் “மே 19ம் தேதி வெளியீட்டுக்கு தயாராக இருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மே 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்பதால் படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 11 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் திரையிடும் சூழலால் வெளியீட்டிலிருந்து பின்வாங்கினோம்.
தமிழ் திரையுலகில் நடைபெறவுள்ள இந்த வேலைநிறுத்தத்தால் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து நிலைமை சீரடையும் என நம்புகிறோம். எங்களுடைய படத்தின் வெளியீட்டை ஜுன் 23ம் தேதி மாற்றியமைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
‘வனமகன்’ படத்தைத் தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘கரு’ படத்தின் முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் விஜய்.