Breaking News
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது: முதன்முறையாக ரேங்க் பட்டியல் இடம் பெறவில்லை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 921.%. கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வு துறை இயக்குநரகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது என தமிழக அரசு நேற்று அறிவித்த நிலையில் முதன்முறையாக ரேங்க் பட்டியல் இல்லாத தேர்வு முடிவுகள் வெளியானது.

தேர்ச்சி விகிதம்:

தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 82.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.

மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை மதிப்பெண்ணுடன் அறிந்து கொள்ளலாம்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையங்களிலும், மத்திய, கிளை நூலகங்களிலும் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6,737 பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 9 லட்சம் மாணவர்கள் 2,427 மையங்களில் தேர்வெழுதினர். தனித் தேர்வர்களாக 31,843 பேரும் சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதியவர்கள் ஆவர்.

முதன்முறை:

1.பிளஸ் 2 தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் முடிவுகளை அனுப்பும் முறை இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2.அதேபோல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது என தமிழக அரசு நேற்று அறிவித்த நிலையில் முதன்முறையாக ரேங்க் பட்டியல் இல்லாத தேர்வு முடிவுகள் வெளியானது.

3. முதல்முறையாக, பிளஸ் 2-வுக்கு மே 12-ம் தேதியும் பத்தாம் வகுப்புக்கு மே 19-ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

விடைத்தாள் நகல் பெறுவது எப்படி?

விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 15-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.