வி.ஐ.பி., பயண செலவு: குட்டு வாங்கும் ‘ஏர் இந்தியா’
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு இயக்கப்பட்ட தனி விமானங்களுக்கான செலவு தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு, மத்திய கணக்கு தணிக்கை துறை அறிவுறுத்தியுள்ளது.
வி.ஐ.பி., பயண செலவு:
மத்திய அரசு நிறுவனமான, ஏர் இந்தியா, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்காக, பல்வேறு தனி விமானங்களை இயக்கி வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களுக்கான செலவு தொகையை, சம்பந்தப்பட்ட துறைகள், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு செலுத்தாமல், நிலுவையில் வைத்துள்ளன. இதனால், ஏர் இந்தியாவிற்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் வசூலாகாமல் உள்ளது.
நிலுவை:
இதுகுறித்து, மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பயணத்திற்காக, ஏர் இந்தியா சார்பில், தனி விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏர் இந்தியா நிறுவனம், 2016 மார்ச் நிலவரப்படி, 513 கோடி ரூபாயை, வசூலிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
வசூலிக்க அறிவுரை:
இது தொடர்பாக, ‘பல்வேறு நகரங்களில் இருந்து, இந்த விமானங்கள் இயக்கப்பட்டதால், அதுபற்றிய விபரங்களை சேகரித்து வருகிறோம்’ என, ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. எனினும், அத்தொகையை வசூலிக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.