6-வது ஏலியன் படத்துடன் ரிட்லீ ஸ்காட்
1979ஆம் ஆண்டு ஏலியன் படத்தின் மூலம் புகழின் வெளிச்சத்துக்கு வந்தவர் இயக்குநர் ரிட்லீ ஸ்காட். ப்ளேட் ரன்னர், க்ளாடியேட்டர், அமெரிக்கன் காங்க்ஸ்டர், ப்ரொமிதியஸ், தி மார்ஷன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தந்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். முக்கியமாக சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளை இவர் திரையில் கையாளும் விதம் மிகவும் சுவாரசியமானது.
இதில் 2012ஆம் ஆண்டு வெளியான ப்ரொமிதியஸ் படம் ஏலியன் பட வரிசையில் ஒன்றாக வந்திருக்க வேண்டியது. அதில் சில மாற்றங்கள் செய்து, ஏலியன் பட வரிசையின் ப்ரீக்வலாக எடுத்தார் ஸ்காட். (ஏலியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 1986-ல் ஜேம்ஸ் கேமரூனும், 1992ல் டேவிட் ஃபின்ச்சரும் இயக்கியது குறிப்பிடத்தக்கது)
தற்போது, பிரபலமான ஏலியன் படத்தின் தலைப்போடு, ஏலியன்: கவனெண்ட் படத்தின் மூலம் மீண்டும் வேற்று கிரகவாசி கதைக்குள் நுழைந்துள்ளார் ஸ்காட்.
இது ப்ரொமிதியஸ் படத்தின் தொடர்ச்சியாக இருக்கும். ஏலியன் பட வரிசையில் ஆறாவது படம் இது. மைக்கேல் ஃபாஸ்பெண்டர், காத்தரின் வாட்டர்ஸ்டோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விண்வெளியின் ஒரு பகுதியில் சென்று கொண்டிருக்கும் விண்கலம் ஒன்று புதியதொரு இடத்தை சென்றடைகிறது. விண்கலக் குழு, அங்கு ஓரு மனிதனை பார்க்கின்றனர். தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள், ஆபத்துகள் என, விசித்திரமான உயிரினங்களை திரையில் உலவவிட்டு திகிலூட்டியிருக்கிறார் ரிட்லீ ஸ்காட்.
மே 12-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் இந்த படத்தின் மொத்த ஓட்ட நேரம் 123 நிமிடங்கள்.