ஐதராபாத்தில் பேனர், கட்-அவுட்களுக்கு தடை
அடுத்த சில நாட்களுக்கு ஆந்திராவில் சூறை காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. 510 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மணிக்கு 100 முதல் 150 கி.மீ., வரை காற்றின் வேகம் இருக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த செவ்வாய்கிழமையன்று ஐதராபாத்தில் 96 மி.மீ., மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த கனமழையால் 290 மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தால் வாகனங்கள் பலவும் சேதமடைந்தன. பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கின. இதனால் பாதுகாப்பு கருதி ஐதராபாத் நகரில் பேனர்கள், விளம்பர பலகைகள், பிளக்ஸ் போர்டுகள், கட் அவுட்கள் வைக்க நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அரசு உத்தரவின் பேரில் சுமார் 3000 பேனர்களை விளம்பர நிறுவனங்கள் அகற்றி உள்ளன.
ஜூன் 15ம் தேதி வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் பருவமழை துவங்குவதற்கு முன் ஐதராபாத்தில் இதே போன்றதொரு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.