விரும்பத்தகாத விவாகரத்து ‘தலாக்’: சொல்கிறது சுப்ரீம் கோர்ட்
முஸ்லிம்கள், மும்முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் முறை, விரும்பத் தகாத, மிக மோசமான விவாகரத்து நடைமுறை’ என, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
மூன்று முறை, தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, முஸ்லிம் பெண்கள் மற்றும் அமைப்புகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ‘இந்த நடைமுறை, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; பாலின பேதத்தை உருவாக்குகிறது’ என, மனுதாரர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசும், தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனு தாக்கல் செய்துள்ளது.
அதே நேரத்தில், ‘இதுகுறித்து விசாரிக்க, கோர்ட்களுக்கு அதிகாரம் இல்லை’ என, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்களை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர், தலைமையிலான அரசியலமைப்பு சட்ட அமர்வு நேற்று முன்தினம் முதல் விசாரித்து வருகிறது. இரண்டாவது நாளாக இந்த வழக்கு நேற்றும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் ஒருவர் சார்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறுகையில், ‘தலாக் மூலம், ஆண்கள் மட்டுமே விவாகரத்து பெறுகின்றனர்; பெண்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, இது, பெண்களின் உரிமையை பறிக்கிறது’ என்றார்.
இதை தொடர்ந்து, தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ள, இஸ்லாமிய நாடுகளின் பட்டியலை அளிக்குமாறு, சுப்ரீம் கோர்ட்டால் வழக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். ‘பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில், தலாக் தடை செய்யப்பட்டுஉள்ளது’ என, கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: முஸ்லிம் மக்களிடம் பழக்கத்தில் உள்ள தலாக் முறை, சட்டபூர்வமானது என, ஒரு பிரிவினர் கூறுகின்றனர். ஆனால், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து வழங்குவது விருப்பத்தின் பேரில் நடைபெறவில்லை. எனவே, இது, விரும்பத் தகாத, மிக மோசமான, விவாகரத்து நடை முறை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.