அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியது
அந்தமானில் தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாகவே தொடங்கியது.
பருவமழை தொடங்கியது
அந்தமான் கடல் பகுதியில் வழக்கமாக கோடை காலம் முடிந்து மே மாதம் 17-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் கே.ஜி.ரமேஷ் கூறியதாவது:-
அந்தமானில் தென்மேற்கு பகுதியில் இருந்து பலத்த காற்று வீசிவருவதுடன், மேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதை பார்க்கும்போது தெற்கு அந்தமான் கடல் பகுதி முழுவதும், வடக்கு அந்தமான் கடலில் ஒரு பகுதியும், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடலில் சில பகுதிகளிலும், நிக்கோபர் தீவுகளிலும் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியிருப்பதை காட்டுகிறது.இதன் காரணமாக அடுத்த 72 மணி நேரத்துக்கு இந்த பகுதிகளில் மழை தொடரும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
கேரளாவில் எப்போது?
அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதால் கேரளாவிலும் முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என்று இப்போதே கூறிவிட முடியாது. இன்னும் சில நாட்கள் சென்றபின் தான் அதுபற்றி கூறமுடியும்.
இவ்வாறு கே.ஜி.ரமேஷ் கூறினார்.
கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந் தேதி தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அப்போது தான் தமிழகத்தின் சில பகுதிகளிலும் பருவமழை பெய்யத்தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த மகேஷ் பலவத் கூறும்போது, கேரளாவில் ஜூன் 1-ந் தேதிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவோ அல்லது பின்னாலோ பருவமழை தொடங்கிவிடும் என்றார்.