Breaking News
சீன எல்லை அருகே பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்தியாவிலேயே மிக நீளமான பாலம்

சீன எல்லை அருகே பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிக நீளமான பாலத்தை வருகிற 26-ந் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.

அருணாசல பிரதேசம்

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருணாசல பிரதேச மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. சீன ராணுவத்தினர் அருணாசல பிரதேச எல்லைப் பகுதிக்குள் நுழைவதும், இந்திய ராணுவத்தினரின் எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் பின்வாங்கிச் செல்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

எனவே, அருணாசல பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால், பிற வடகிழக்கு மாநிலங்களில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு போதிய சாலை வசதிகள் இல்லை. அசாம் மாநிலம் தேஜ்பூர் அருகே பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கலியாபோமோரா பாலம்தான் அருணாசல பிரதேசத்துக்கு முக்கிய இணைப்பாக விளங்குகிறது. சாலை மார்க்கமாக இந்த பாலத்தின் வழியாகத்தான் அருணாசல பிரதேசத்துக்கு முக்கிய பொருட்களும், ராணுவ தளவாடங்களும் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தியாவிலேயே நீளமான பாலம்

இந்த நிலையில், அசாம்-அருணாசலபிரதேச மாநிலங்களை இணைக்கும் வகையில் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே புதிதாக மற்றொரு பாலம் கட்டப்பட்டு உள்ளது. தோலா-சதியா ஆகிய இடங்களுக்கு இடையே ஆற்றின் குறுக்கே 9.15 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம்தான் இந்தியாவிலேயே மிக நீளமான பாலம் ஆகும். இதன் கட்டுமான பணிகள் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கின. ரூ.950 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஆற்றுப்பாலம், மும்பையில் பாந்த்ரா – ஒர்லி இடையே கடலில் கட்டப்பட்டுள்ள பாலத்தை விட 3.55 கிலோமீட்டர் அதிக நீளம் கொண்டது ஆகும்.

60 டன் எடை கொண்ட டாங்கிகள் மற்றும் ராணுவ தளவாடங்களை அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையையொட்டிய பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு இந்த பாலம் மிகவும் உதவியாக இருக்கும்.

மோடி திறந்துவைக்கிறார்

சீன எல்லையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இந்த பாலம் அமைந்து உள்ளது. இந்த பாலத்தின் மூலம் அசாம்-அருணாசல பிரதேச மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் பயண நேரமும் 4 மணி நேரம் குறையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அசாமில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்து வருகிற 24-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு அடைகிறது. இதையொட்டி, வருகிற 26-ந் தேதி இந்த பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.