இந்தியா புறக்கணிப்பு; பாகிஸ்தான் உள்பட 29 நாடுகளின் தலைவர்கள்
இந்தியாவுடன் மறைமுகப் போரை திணித்துவரும் பாகிஸ்தானுடன் சீனா நட்புறவு கொண்டுள்ளது. அந்த நாட்டுடனான பொருளாதார, வர்த்தக தொடர்பை வலுப்படுத்த சீனா விரும்புகிறது. இதற்கு வசதியாக ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளை இணைத்து ‘சில்க் ரோடு’ என்ற பெயரில் துறைமுகம், சாலை, ரெயில் தடங்கள் ஆகியவற்றை விஸ்தரித்து புதிய பொருளாதார தட திட்டம் ஒன்றை நிறைவேற்ற உள்ளது.
பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக உள்ள இந்த திட்டத்தின் பாதை, இந்தியாவுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அமைய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தியா புறக்கணிப்பு
இதேபோன்று, இந்த திட்டத்தால் உலகளவில் சீனாவின் பொருளாதார, வணிக ஆதிக்கம் மிகுந்து விடும் என்பதால் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும் இதை விரும்பவில்லை.
இந்தநிலையில் இத்திட்டம் தொடர்பாக சீனா, பீஜிங்கில் 2 நாள் மாநாடு ஒன்றை கூட்டி உள்ளது. இந்த மாநாட்டில் பாகிஸ்தான் உள்ளிட்ட 29 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த திட்டம், இந்தியாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் எதிரான திட்டம் என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்து இந்த மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக இந்தியா அறிவித்தது.
மாநாடு தொடங்கியது
இருப்பினும், இந்த 2 நாள் மாநாடு நேற்று திட்டமிட்டபடி பீஜிங்கில் தொடங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, இந்தியா இந்த மாநாட்டை புறக்கணித்து விட்டது.
இந்த மாநாட்டை சீன அதிபர் ஜின் பிங் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், ‘‘உலகளாவிய திறந்த பொருளாதார ஒத்துழைப்புக்காக ஒரு திறந்த தளத்தை நாம் உருவாக்க வேண்டும். அது நிலைத்து நிற்கவும், வளர்ச்சி பெறவும் உதவ வேண்டும். நாம் இணைந்து ஒரு கூட்டுச்சூழலை உருவாக்க வேண்டும். அது, சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு விதிகளில் ஒரு நியாயமான, சமமான மற்றும் வெளிப்படையான அமைப்பாக திகழும்’’ என கூறினார்.
ரூ.8 லட்சம் கோடி
இந்த திட்டத்துக்காக 124 பில்லியன் டாலர் நிதி (சுமார் ரூ.8 லட்சத்து 6 ஆயிரம் கோடி) செலவிட ஜின்பிங் உறுதி அளித்தார்.
இந்த திட்டம் தொடர்பாக ஜின் பிங் தனது பேச்சில் கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:–
* தற்போதைய பொருளாதார தட திட்டத்துக்கு கூடுதலாக 100 பில்லியன் யுவான் ஒதுக்கீடு செய்யப்படும்.
* சீன வளர்ச்சி வங்கியிடம் இருந்து 250 பில்லியன் யுவான் கடன்.
* சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியிடம் இருந்து 130 பில்லியன் யுவான் கடன்
* புதிய பொருளாதார தட நாடுகளுக்கு, சர்வதேச அமைப்புகளுக்கு உதவுவதற்காக 60 பில்லியன் யுவான்.
* நிதி நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக 300 பில்லியன் யுவான்
* நெருக்கடி கால உணவு உதவியாக 2 பில்லியன் யுவான்
* தெற்கு ஒத்துழைப்பு நிதி 1 பில்லியன் டாலர்
* புதிய பொருளாதார தட திட்ட நாடுகளில் ஒத்துழைப்பு திட்டங்களுக்காக 1 பில்லியன் டாலர். இவ்வாறு அவர் அறிவித்தார்.