Breaking News
இன்று உலகமெங்கும் மீண்டும் இணைய தாக்குதல்? இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று (திங்கட்கிழமை) நடைபெறலாம் என அவர்கள் யூகிக்கின்றனர்.

இங்கிலாந்து உள்துறை மந்திரி அம்பர் ரூத் இதுபற்றி குறிப்பிடுகையில், ‘‘இந்தப் பிரச்சினை பெருமளவு சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் கம்ப்யூட்டர் வைரசுக்கு எதிராக இன்னும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்’’ என்று கூறினார்.

இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, கணினியில் கோப்புகளை திறப்பதற்கு 300 டாலர் முதல் 600 டாலர் வரை (சுமார் ரூ.19 ஆயிரத்து 500 முதல் ரூ.39 ஆயிரம் வரையில்) பிட்காயின்களை செலுத்துமாறு கணினி திரையில் தோன்றியதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில் இதுவரை 22 ஆயிரம் பவுண்டுக்கு அதிகமாக (சுமார் ரூ.18¼ லட்சம்) 3 கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை இப்படி ஒரு இணைய தாக்குதல் நடந்தது இல்லை என்று யூரோபோல் (ஐரோப்பிய சட்ட அமலாக்கல் ஒத்துழைப்பு முகமை) கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.