‘கோடிக்கணக்கான கருப்பு பணத்தை மாற்றினார்’ அரவிந்த் கெஜ்ரிவால் மீது முன்னாள் மந்திரி மீண்டும் குற்றச்சாட்டு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோடிக்கணக்கான கருப்பு பணத்தை வங்கி மூலம் மாற்றியதாக முன்னாள் மந்திரி கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினார். இந்த பேட்டியின் போதே அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உண்ணாவிரதம்
டெல்லி ஆம் ஆத்மி அரசில் நீர்வளத்துறை மந்திரியாக இருந்த கபில் மிஸ்ரா கடந்த 6-ந்தேதி நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், ஆம் ஆத்மி அரசு மீதும், முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குறிப்பாக மாநில சுகாதார மந்திரி சத்யேந்திர ஜெயினிடம் இருந்து கெஜ்ரிவால் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் கூறினார்.
பின்னர் மாநில அரசுக்கு எதிராக கடந்த 10-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கிய அவர், ஆம் ஆத்மி தலைவர்களின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்களை கட்சி வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதனால் அவர் கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வழங்குவேன்
உண்ணாவிரத போராட்டத்தின் 5-வது நாளான நேற்று, கபில் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கெஜ்ரிவால் மீது மேலும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் கூறும்போது, ‘ஆம் ஆத்மி வசூலித்த நன்கொடைகள் தொடர்பாக தவறான தகவல்களே தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்டது. கட்சி வசூலித்த தொகைக்கும், வரவு வைக்கப்பட்ட தொகைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது’ என்றார். அப்போது கட்சி நிதி தொடர்பான சில காசோலைகளையும் செய்தியாளர்களிடம் அவர் காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், ‘வங்கி மூலமாக கோடிக்கணக்கான கருப்பு பணத்தை கெஜ்ரிவால் மாற்றினார். ஏராளமான ஓடு கம்பெனிகளிடம் இருந்து பணம் பெற்றார். அது தொடர்பான தகவல்களை நாளை (இன்று) சி.பி.ஐ. அதிகாரிகளை சந்தித்து வழங்குவேன். நீங்கள் (கெஜ்ரிவால்) பதவி விலகாவிட்டால், உங்களை நான் கோர்ட்டுக்கு இழுப்பேன்’ என்று தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறிக்கொண்டு இருந்த போதே கபில் மிஸ்ரா திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால் அவரது உடலில் நீரிழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், எனினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் கூறினர். மேலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக கபில் மிஸ்ராவின் உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமடைந்தது. உண்ணாவிரத பந்தலில் அவரை சந்தித்த டாகடர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் இதற்கு அவர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.