தனியார் பள்ளிகள் கட்டணத்துக்கு சட்டம்
‘‘நாடு முழுவதும் தனியார் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றுவதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது’’ என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். குஜராத்தின் வதோதராவில் உள்ள சோகாடா கிராமத்தில் நேற்று நடந்த சர்வதேச இளைஞர் மாநாட்டில், ஜவடேகர் பங்கேற்று பேசியதாவது: அனைவருக்கும் கல்வி என்ற நிலையிலிருந்து, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தற்போது முழு கவனம் செலுத்தப்படுகிறது. தரமான கல்வி மட்டுமே, ஒருவரை நல்ல குடிமகனாகவும், வலுவான எண்ணங்களுடனும் மேம்படுத்த முடியும் என்பதை நம்பும் மத்திய அரசு, அதற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தரமான கல்வி அவசியமானது.
தனியார் பள்ளி கல்விக் கட்டணங்களை முறைப்படுத்த குஜராத் மாநில அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதேபோல, நாடு முழுவதும் தனியார் பள்ளி கல்விக் கட்டணங்களை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றுவதற்கான ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, சிபிஎஸ்இ பள்ளிகளில் வர்த்தக நோக்கில் புத்தகம், சீருடை போன்றவற்றை விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தரமான கல்வி வழங்குவதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்பதையே விரும்புகிறோம். அதற்கு கல்வி முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு ஆலோசனை வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.