வட கொரியா ஏவுகணை சோதனை : அமெரிக்கா, ஜப்பான் கண்டனம்
நீண்ட துாரத்தில் உள்ள, எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தி முடித்துள்ள வட கொரியாவுக்கு, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. ‘இந்த ஏவுகணை, அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தும் திறன் உடையது’ என, வட கொரியா அறிவித்துள்ளது.
கிழக்காசிய நாடான வட கொரியா, அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவை நேரடியாக எதிர்த்து வரும் வட கொரியா, மீண்டும் புதிய ஏவுகணை சோதனை நடத்தி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வட கொரியா சோதனை செய்த நவீன ஏவுகணை, 700 கி.மீ., தொலைவு பயணித்து, ஜப்பான் கடல் பகுதியில் விழுந்தது. ‘இந்த ஏவுகணை, இதை விட பல மடங்கு அதிக துாரம் சென்று, எதிரியின் இலக்கை தாக்கும் திறன் படைத்தது. அணு ஆயுதத்தையும் ஏந்திச் சென்று, தாக்கும் திறன் உடையது’ என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஏவுகணை சோதனை நடந்த போது, ராணுவ அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல் லுனர்களுடன், வட கொரிய அதிபர் கிம் ஜங் யுன்னும், உடனிருந்தார். சோதனை வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடும் வகையில், அருகில் இருந்தவர்களுடன், அதிபர் கிம், கைகளை தட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.வட கொரியாவின் இந்தசெயலுக்கு, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘உலக நாடுகள் மத்தியில், வட கொரியாவை
தனிமைப்படுத்தும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.சமீபத்தில், தென் கொரியாவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, அந்நாட்டு அதிபராக, மூன் ஜேயின் பதவியேற்றதை அடுத்து, இரு நாடுகளிடையிலான உறவில் நிலவி வரும் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கப் பட்டது.இந்நிலையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனையால், இரு நாட்டு உறவில் சிக்கல் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தென் கொரிய அதிபர் மூன் ஜேயின், முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.