ஆந்திராவிற்கு ரூ.362 கோடி; தமிழக அரசு நிலுவைத் தொகை
சட்டசபையில் மானிய கோரிக்கை தாக்கலுக்கு பின், ஆந்திராவிற்கு, கிருஷ்ணா நீருக்கான நிலுவைத் தொகை வழங்க, தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டு தோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, சாய்கங்கை கால்வாயில், ஆந்திர அரசு திறக்க வேண்டும். இந்த கால்வாய் பராமரிப்பு பணிக்கான நிதியை, ஆந்திராவுடன், தமிழக அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன்படி, ஆந்திராவிற்கு, தமிழக அரசு, 362 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது. இந்த நிலுவைத் தொகையை கேட்டு, சில தினங்களுக்கு முன், ஆந்திர தலைமை செயலர், தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், சென்னை வந்து, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர், சண்முகம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசித்து, பதில் அளிப்பதாக, தமிழக அதிகாரிகள் சமாளித்தனர்.
நிலுவைத் தொகை கிடைத்தால் தான், ஜூலையில், முறைப்படி தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது, அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ஆந்திராவிற்கு நிலுவைத் தொகை வழங்க, தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடும் வறட்சி நிலவுவதால், ஜூலையில், சென்னையின் குடிநீர் தேவைக்கு, கிருஷ்ணா நீர் அவசியம். எனவே, நிலுவைத் தொகையை வழங்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. மானிய கோரிக்கை விவாதத்திற்கு பிறகே, நிதி ஒதுக்க முடியும். இதுகுறித்து, ஆந்திர அதிகாரிகளுக்கு, முறைப்படி தெரிவிக்கப்படும். இதற்காக, அதிகாரிகள் குழு ஆந்திரா செல்ல உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.