புகார் அனுப்பிய மணமகனுக்கு ரயில்வே அமைச்சர் உதவி
‘ரயில் குறித்த நேரத்தில் வந்து சேராவிட்டால், தன் திருமணம் நின்று விடும்’ என, புகார் அளித்த மணமகனுக்கு, ரயில்வே அமைச்சரின் உதவியால் திருமணம் நடந்தது.
பீஹார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இங்குள்ள ஆராவில் வசிக்கும், சுஷில் குமார் என்பவருக்கு, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, டில்லியில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முதல் நாள், ஆராவில் இருந்து டில்லி செல்லும் மகத் எக்ஸ்பிரஸ் ரயிலில், மணமகன் உட்பட, 86 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
இரவு, 7:00 மணிக்கு ஆராவில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் பகல், 12:00 மணிக்கு டில்லி சென்றடைய வேண்டும். சில நாட்களாக, மகத் எக்ஸ்பிரஸ் ரயில், ஆறு முதல், 10 மணி நேரம் வரை தாமதமாக டில்லி சென்றடைகிறது. திருமண வீட்டார் சென்றபோதும், ரயில், மெதுவாகவே ஊர்ந்து சென்றது.
இதனால், கவலையடைந்த மணமகன் சுஷில் குமார், இதுகுறித்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, சுரேஷ் பிரபுவுக்கு, சமூக வலைதளம் மூலமாக, ‘குறித்த நேரத்தில் ரயில், டில்லியை சென்றடையாவிட்டால், என் திருமணம் நின்றுவிடும்’ என, புகார் அளித்தார்.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு, ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து, ரயிலின் வேகத்தை அதிகரித்து, ஐந்து மணி நேரம் தாமதமாக, மாலை, 5:00 மணியளவில் டில்லியை அடைந்தது. ரயில் டில்லியை சென்றடையும் வரை, டென்ஷனில் இருந்த மணமகன் மற்றும் உறவினர்கள், திருமண நேரத்திற்கு முன் சென்றடைந்ததும் நிம்மதியடைந்தனர்.