ஆப்கன் ‘டிவி’ ஸ்டேஷனில் தற்கொலை படை தாக்குதல்
ஆப்கானிஸ்தானில், அரசு, ‘டிவி’ ஸ்டேஷன் மீது, தாக்குதல் நடத்த முயன்ற தற்கொலைப் படையினருக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில், 10 பேர் கொல்லப்பட்டனர்; 14 பேர் காயமடைந்தனர்.
அண்டை நாடான ஆப்கனில், ஜலாலாபாத் நகரில் உள்ள அரசு, ‘டிவி’ ஸ்டேஷன் மீது, தற்கொலைப் படை பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்களுக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த சம்பவத்தில், 10 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் காயமடைந்தனர். இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடந்ததால், ‘டிவி’ ஸ்டேஷன் ஊழியர்கள், அலுவலக கட்டடத்துக்குள் சிக்கி இருப்பதாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்துக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இது குறித்து, அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ரேடியோ டெலிவிஷன் ஆப்கானிஸ்தான் எனப்படும், அரசு, ‘டிவி’ அலுவலகத்துக்கு, நான்கு பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.
‘அவர்களில் இருவர், தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்தனர். மற்ற இருவர், பாதுகாப்பு படை வீரர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்’ என்றார்.