Breaking News
குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு : சர்வதேச கோர்ட் இன்று தீர்ப்பு

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட் விதித்த மரண தண்டனையை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று (மே 18) தீர்ப்பு வழங்க உள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.
இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச கோர்ட், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அதன்பின்னர் கடந்த 15-ந்தேதி விசாரணை தொடங்கியது. அப்போது, ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும், கேலிக்கூத்தாக விசாரணை நடைபெற்றதாகவும் இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் வைத்தது.
பாகிஸ்தான் தரப்பில் வாதாடும்போது, குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவின் முறையீடு தேவையற்றது என்றும், தவறான நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.