‘தலாக்’கை பெண்கள் மறுக்க முடியுமா?
‘மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து அளிக்கப்படும் முறையை மறுப்பதற்கு, முஸ்லிம் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளதா’ என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
முஸ்லிம்களில், மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் கோடைக்கால விடுமுறை அமர்வு விசாரித்து வருகிறது.’தலாக் முறையை எதிர்ப்பவர்கள் மூன்று நாட்களும், ஆதரிப்பவர்கள் மூன்று நாட்களும் தங்கள் வாதத்தை முன்வைக்கலாம்’ என, சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது; அதன்படி, தலாக் முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்களின் வாதம் முடிவடைந்தது.
நேற்று முன்தினம் நடந்த வாதத்தின்போது, ‘முஸ்லிம்களில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம்தான். பெண்களும் தலாக் முறையை பயன்படுத்த முடியும். தலாக் கூறி விவாகரத்து பெறும்போது, அதிக இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்த முடியும். திருமண ஒப்பந்தத்தில் இதை சேர்க்க முடியும்’ என, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்தது.
இந்த நிலையில், விசாரணையின் ஐந்தாவது நாளான நேற்று, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன;
அப்போது சுப்ரீம் கோர்ட் அமர்வு எழுப்பிய கேள்விகள்:முஸ்லிம்களின் திருமணம், ஒரு ஒப்பந்தம் என கூறுகிறீர்கள். அப்படியானால், ஒப்பந்தம் செய்யும்போது, தலாக் முறையில் விவாகரத்து பெறுவதை சேர்க்கக் கூடாது என்று கூறுவதற்கு, பெண்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளதா.
திருமண ஒப்பந்தம் செய்யும்போது, தலாக் முறையை ஏற்கிறீர்களா என பெண்களிடம் கேட்டு, அதை பதிவு செய்யும்படி, திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கு, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவுரை அளிக்குமா?
இவ்வாறு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து, வாரியத்தின் உறுப்பினர்களின் கருத்தை கேட்டு, பதிலளிப்பதாக, அதன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் குறிப்பிட்டார்.
வழக்கால் ஆதரவு பெருகுகிறது :
அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் வாதிட்டதாவது:முஸ்லிம்களின் தலாக் விவாகரத்து முறையானது, தற்போது வழக்கொழிந்து வருகிறது. மிகவும் குறைவானவர்களே இதை பயன்படுத்துகின்றனர். தற்போது, இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இது பிரபலமாகியுள்ளது. தங்கள் உரிமை பறிபோவதை அறிந்து, இந்த முறைக்கு முஸ்லிம்கள் அதிக ஆதரவு அளிக்கத் துவங்கியுள்ளனர்.இவ்வாறு அவர் வாதிட்டார்.