‘நீட்’ தேர்வுக்கு எதிராக வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்
மே 7 ல் நடந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்து, அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், புதிதாக தேர்வு நடத்த தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை டி.ஆர்.ஓ., காலனி ஜொனிலாவின் தந்தை சீனிவாசகம் உட்பட 9 பேர் தாக்கல் செய்த மனு: எம்.பி.பி.எஸ்.,-பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) கொண்டுவர 2012 ல் முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் ‘நீட்’ தேர்வுக்கு 2016 ல் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.2016 ல் ‘நீட்’ தேர்வை ஆங்கிலம், இந்தியில் நடத்த அறிவிப்பு வெளியானது.
2017 லிருந்து தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, அசாமி, குஜராத்தி, கன்னடம், ஒடியா மொழிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியானது. இந்தியா முழுவதும் 2017 மே 7 ல் ‘நீட்’ நடந்தது. நாங்கள் ஆங்கிலத்தில் எழுதினோம். இந்த அகில இந்திய போட்டித் தேர்வை ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், வெவ்வேறு மாறுபட்ட வினாக்கள் கொண்ட வினாத்தாள்கள் பல்வேறு இடங்களில் வினியோகிக்கப்பட்டது. இது அதிர்ச்சிஅளிக்கிறது.
நீட் தேர்வு முடிவு ஜூன் 8 ல் வெளியாகிறது. இதன் தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனால் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்.மே 7 ல் நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், புதிதாக ‘நீட்’ தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தனர். நீதிபதி என்.சேஷசாயி விசாரித்தார்.
மனுதாரர் வழக்கறிஞர், “தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்,” என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி, அடுத்த வாரம் ஒத்திவைத்தார்.