Breaking News
கொல்கத்தாவை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மும்பை

பந்து வீச்சில் கரண் சர்மா, பேட்டிங்கில் கிருணல் பாண்டியா அபாரம்

ஐபிஎல் தொடரின் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. மெக்லீனகனுக்கு பதிலாக மிட்செல் ஜான்சன் இடம் பெற்றார்.

கொல்கத்தா அணியில் இரு மாற்றங்கள் இருந்தது. யூசுப் பதானுக்கு பதிலாக அங்கித் ராஜ் புத்தும், டிரென்ட் போல்ட்டுக்கு பதிலாக காலின் டி கிராண்ட் ஹோமும் களமிறங்கினர். கொல்கத்தா முதலில் பேட் செய்தது.

தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் களமிறங்கினர். கிறிஸ் லின் 8 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதை யடுத்து களமிறங்கிய கவுதம் காம்பீர் நிதானமாக விளையாடி னார். மலிங்கா வீசிய 4-வது ஓவரில் சுனில் நரேன் சிக்ஸர் அடித்தார்.

ஆனால் கரண் சர்மா வீசிய அடுத்த ஓவரில் சுனில் நரேன் ஸ்டெம்பிங் ஆனார். அவர் 10 பந்துகளில், 10 ரன்கள் சேர்த்தார். 24 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ராபின் உத்தப்பாவை 3 ரன்களில் பும்ரா வெளியேற்றினார். இதனால் 25 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து கொல்கத்தா நெருக்கடியை சந்தித்தது.

அடுத்த 6 ரன்களை சேர்ப்பதற் குள் மேலும் இரு விக்கெட்களை கொல்கத்தா அணி தாரை வார்த்தது. கரண் சர்மா வீசிய 7-வது ஓவரில் காம்பீர் 12, கிராண்ட் ஹோம் 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

31 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் இஷாங்க் ஜக்கி, சூர்யகுமார் யாதவ் ஜோடி நிதானமாக விளையாடியது. 10 ஓவர்களில் 43 ரன்கள் சேர்க் கப்பட்டது. கிருணல் பாண்டியா வீசிய 11-வது ஓவரில் ஒரு சிக்ஸரும், 13-வது ஓவரில் இரு பவுண்டரிகளையும் விரட்டினார் சூர்ய குமார் யாதவ்.

அதேவேளையில் மலிங்கா வீசிய 14-வது ஓவரில் இஷாங்க் ஜக்கி 2 பவுண்டரிகள் அடித்தார். ரன்கள் ஓரளவு சீராக உயர்ந்து வந்த நிலையில் கரண் சர்மா வீசிய 15-வது ஓவரில் இஷாங்க் ஜக்கி ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்தார். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 56 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய பியூஸ் சாவ்லா 2, நாதன் கவுல்டர் நைல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்சன் வீசிய 16-வது ஓவரில் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த சூர்ய குமார் யாதவ் 25 பந்துகளில், 2 பவுண் டரிகள், ஒரு சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் பந்தில் வெளியேறினார்.

கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய அங்கித் ராஜ்புத் 4 ரன்களில் மலிங்கா பந்தில் போல்டாக 18.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 107 ரன்களுக்கு சுருண்டது. உமேஷ் யாதவ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை அணி தரப்பில் கரண் சர்மா 4 ஓவர்கள் வீசி 16 ரன் களுக்கு 4 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா 3, ஜான்சன் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து 108 ரன்கள் இலக்குடன் மும்பை அணி பேட் செய்தது.

உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் பார்த்தீவ் படேல், சிம்மன்ஸ் ஜோடி 11 ரன்கள் சேர்த்தது. பியூஸ் சாவ்லா வீசிய அடுத்த ஓவரில் சிம்மன்ஸ் (3) எல்பிடபிள்யூ ஆனார். உமேஷ் வீசிய 3-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டிய பார்த்தீவ் படேல் (14), 5-வது பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஸ்கோர் 34 ஆக இருந்த போது அம்பாட்டி ராயுடு 11 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் பியூஸ் சாவ்லா பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய கிருணல் பாண்டியா, ரோஹித் சர்மாவுடன் இணைந்து நேர்த்தியாக பேட் செய்தார். 10 ஓவர் களில் 63 ரன்கள் எடுக்கப்பட்டது.

பியூஸ் சாவ்லா வீசிய 11-வது ஓவரில் கிருணல் பாண்டியா 2 பவுண்டரிகளும், ரோஹித் சர்மா ஒரு சிக்ஸரும் அடித்தனர். சுனில் நரேன் வீசிய அடுத்த ஓவரில் கிருணல் பாண்டியா 2 பவுண்டரிகள் விரட்டினார். வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் அங்கித் ராஜ்புத் பந்தில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

அவர் 24 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்தார். 4-வது விக்கெட் டுக்கு கிருணல் பாண்டியாவுடன் இணைந்து ரோஹித் சர்மா 54 ரன்கள் சேர்த்தார். கிருணல் பாண்டியா 30 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், பொலார்டு 9 ரன்களும் சேர்க்க மும்பை அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஹைதராபாத்தில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் புனே – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.