பன்னீரிடம் மோடி பஞ்சாயத்து: கட்சி இணைப்புக்கு புதிய பாதை
பழனிச்சாமி அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டு பிரிவுகளாக பிளந்து நிற்கும் அ.தி.மு.க., ஒன்று பட வேண்டும் என்று, இரு அணியினரைக் காட்டிலும், அகில இந்திய பா.ஜ., தலைவர்கள் விருப்பப்படுகின்றனர். குறிப்பாக, பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவும் விருப்பப்படுகின்றனர். துவக்கத்தில், இந்த விஷயத்தை லேசுபாசாக பழனிச்சாமி தரப்பிடம் பா.ஜ., தரப்பில் இருந்து சொல்லப்பட்டதும், அதெப்படி, எங்கள் உட்கட்சி விவகாரத்தில், பா.ஜ., தலையிட முடியும் என, ஆவேசம் காட்டிய அ.தி.மு.க.,வின் பழனிச்சாமி தரப்பு, போகப் போக, பா.ஜ., விருப்பப்படியே நடப்பதாக உறுதி அளித்து, அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதற்காக, பழனிச்சாமி தரப்புக்கான தூதுவராக அமைச்சர் தங்கமணி நியமிக்கப்பட்டு, அவர், சமீபத்தில் இரண்டு முறை பிரதமர் மோடியை சந்தித்து விட்டார்.
தங்கமணி பேச்சு:
கடந்த 14ல் இரண்டாவது முறையாக டில்லி சென்ற அமைச்சர் தங்கமணி, பிரதமர் வீட்டுக்குச் சென்று சந்தித்துள்ளார். கிட்டதட்ட இருவரும் 30 நிமிடங்களுக்கும் கூடுதலான நேரம் பேசியுள்ளனர். அப்போது, இணைப்புக்கு பன்னீர்செல்வம் தரப்புத்தான் முரண்டு பிடிக்கிறது. நிபந்தனை மேல் நிபந்தனைகள் விதித்துக் கொண்டே இருக்கின்றனர். அதனால், கட்சி இணைப்பு என்பது சாத்தியப்படுமா என தெரியவில்லை என, சொல்லியுள்ளார். கூடவே, ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சிக்குள் மீண்டும் கொண்டு வந்து, அவர் மூலமாக பா.ஜ.,வுடன் இணக்கமாக செயல்படுவதைக் காட்டிலும், பழனிச்சாமி தரப்பிலான நாங்களே, உங்களுக்கு நேரடியாக ஆதரவாக இருக்கிறோம்; இணக்கமாக நடந்து கொள்கிறோம் என உறுதியளித்து பேசியுள்ளார்.
இரண்டு நிபந்தனை:
ஆனால், அதை ஏற்காத பிரதமர் மோடி, பன்னீர்செல்வம் தரப்பினரிடம் நானே பேசிக் கொள்கிறேன். அவர்களை டில்லி வரவழைத்து, இணைப்புக்கு வலியுறுத்திப் பேசி விடுகிறேன். முக்கியமான இரண்டு நிபந்தனைகளை மட்டும்தான், இணைப்பு பேச்சுவார்த்தைக்கு முன் அரசு தரப்பில் செய்து கொடுக்க வேண்டும் என, பன்னீர்செல்வம் கேட்கிறார். வேறு நிபந்தனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும், அவரிடம் பேசி முடிவெடுக்கலாம். அதுவரை, பழனிச்சாமி தரப்பில் அமைதியாக இருங்கள். எக்காரணம் கொண்டும், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆபத்து நேராது என்று உறுதி அளித்துள்ளார்.இதையடுத்து, 19ம் தேதி, பிரதமர் மோடியை சந்தித்து, 40 நிமிடங்களுக்கும் கூடுதலாக சந்தித்துப் பேசியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இருவரும் தமிழக நலன்கள் குறித்து பேசியதாக வெளிப்படையாக சொல்லப்பட்டாலும், முழுக்க முழுக்க, அரசியல்தான் பேசியிருக்கின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க., இணைப்புக் குறித்துத்தான் பேச்சு அமைந்திருக்கிறது.அப்போது, சசிகலா குடும்பம் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தும் விஷயத்தில் தங்கள் தரப்பு மிக உறுதியாக இருப்பதாக, பிரதமரிடம் கூறிய ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை போக்க, சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார். கூடவே, எக்காரணம் கொண்டும், அ.தி.மு.க., அரசை கலைக்க நாங்கள் துணை போக மாட்டோம் எனவும் மோடியிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, பழனிச்சாமி தரப்பை அழைத்துப் பேசி, மோடி, அவர்களுக்கு சில அறிவுரைகளைக் கூறக்கூடும். இதற்கு இரண்டு தரப்பிலும் ஒத்துழைப்பு இல்லையென்றால், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்களாக இருக்க மாட்டார்கள் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.