போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க நேர்மையான அதிகாரி தலைமையில் தனிப்பிரிவு அமைக்க வேண்டும்
போதைப் பொருட்கள் மற்றும் பாக்குகள் விற்பனையை தடுப்பதற்காக நேர்மையான அதிகாரி ஒருவர் தலைமையில் தனிப்பிரிவு அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
போதைப் பாக்கு விற்பனை
தமிழ்நாட்டில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மனிதர்களின் உயிரைப் பறிக்கும் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் மட்டும் தமிழகம் முழுவதும் தடையின்றி கிடைப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மதுவுக்கு சற்றும் சளைக்காத வகையில் போதைப் பாக்குகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தும் அதன் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது ஆகும்.
போதைப்பாக்கு மட்டுமின்றி, கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களும் தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை குறிவைத்தே இந்த வணிகம் நடக்கிறது. இதுகுறித்த அனைத்துத் தகவல்களும் காவல்துறையினருக்கு நன்றாக தெரியும் என்ற போதிலும் இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் மாணவ சமுதாயம் தொடர்ந்து சீரழிகிறது.
தனிப்பிரிவு அமைக்க வேண்டும்
இதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் போதைப் பாக்குகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வி நிறுவன வளாகங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பிற போதைப் பொருட்கள் விற்கப்படுவதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும்.
காவல்துறையில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு, மதுவிலக்குப் பிரிவு ஆகியவை இருந்தும் இளைய தலைமுறையை சீரழிக்கும் போதைப் பொருட்களின் விற்பனை கட்டுப்படுத்தப்படாத நிலையில், போதைப் பொருட்கள் மற்றும் பாக்குகள் விற்பனையை தடுப்பதற்காக நேர்மையான அதிகாரி ஒருவர் தலைமையில் தனிப்பிரிவு அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.