கவர்னர் கிரண்பேடியை விமர்சிக்காதீங்க : முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது அமர்வு கூட்டம் இன்று துவங்கியது. கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் கூட்டம் துவங்கியது.
அப்போது என்.ஆர்.காங்., அசோக் ஆனந்த் கவர்னர் கிரண்பேடியை புகழ்ந்து பேசினார். இதற்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், என்.ஆர்.காங்., உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆளும்கட்சியினர் தங்களை பேச அனுமதிப்பதில்லை எனக் கூறி என்.ஆர்.காங்., உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி, சட்டசபையில் கவர்னரை பற்றிய விமர்சனமோ, விவாதமோ வேண்டாம் என தெரிவித்தார்.
இதற்கிடையில் அவையில் இருந்து வெளியே வந்த என்.ஆர்.காங்.,ன் அசோக் ஆனந்த், புதுச்சேரி அரசின் இயலாமையை மறைக்கவே கவர்னர் கிரண்பேடியை குறை கூறியும், குற்றம்சாட்டியும் வருகின்றனர். கவர்னர் கிரண்பேடியின் பல்வேறு பணிகளுக்கு ஆளும் கட்சியினர் இடையூறாக இருக்கின்றனர். அவையில் எங்களை பேச அனுமதிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.