சிறையில் மாணவி நிர்வாணம் : மனித உரிமை ஆணையம் ‘நோட்டீஸ்’
சிறையில், மாணவியை நிர்வாணப்படுத்தியது குறித்து, விளக்கம் அளிக்கும்படி, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.,க்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் நடந்த, ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி வளர்மதி, சுவாதி உட்பட, ஏழு பேர் ரயிலில் சென்றனர்.
குளித்தலை ரயில் நிலையத்தில், ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களில், வளர்மதியும், சுவாதியும், திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்; மற்றவர்கள், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவி வளர்மதி, நேற்று முன்தினம் ஜாமினில் வெளியே வந்தார்.
அப்போது, அவர் கூறுகையில், ‘சிறையில், என்னிடம் சோதனை நடத்த வேண்டும் எனக்கூறி, உடைகளை கழற்றும்படி கூறினர். நான் மறுத்தபோது, தொடர்ந்து ஐந்து முறை என்னை நிர்வாணமாக்கி சோதனையிட்டனர்’ என்றார்.
இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து, ஆணைய தலைவர், டி.மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவில், ‘கல்லுாரி மாணவியின் குற்றச்சாட்டு குறித்து, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., விசாரணை நடத்தி, ஆறு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என, கூறப்பட்டுள்ளது.