Breaking News
ஜி.எஸ்.டி., அமலாகும் முன் விலையை உயர்த்தினால் நடவடிக்கை’

‘ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முன், பொருட்கள் விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா எச்சரித்து உள்ளார்.

நாடு முழுவதும், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வர உள்ளது. இதுவரை, 1,200 பொருட்கள் மற்றும் 500 வகையான சேவைகளுக்கு, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என, நான்கு வித வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில், சேவைகள் வரி, தற்போதைய, 15 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர உள்ளது. எனினும், சேவை நிறுவனங்கள், மூலப்பொருட்களுக்கு செலுத்திய வரியை திரும்பப் பெறும் என்பதால், தற்போதைய அளவிலேயே, வரி விகிதம் இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், ஒருசில நிறுவனங்கள், அதிக லாபம் ஈட்டும் நோக்கில், விலையை உயர்த்தி உள்ளது, மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து, வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா கூறியதாவது: ஜி.எஸ்.டி., சட்டத்தில், வரி குறைக்கப்பட்டால், அதன் பலனை நிறுவனங்கள், நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அவ்வாறு பலன்கள் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, லாப தடுப்பு ஆணையம் அமைக்கவும், சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.ஆகவே, ஜி.எஸ்.டி., அமலுக்கு வரும் வரை, நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்பு பொருட்கள், சேவைகள் ஆகியவற்றுக்கான விலையை உயர்த்த வேண்டாம். மூலப்பொருட்கள் விலை உயர்வை, சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டுமே, விலை உயர்வு குறித்து, நிறுவனங்கள் யோசிக்கலாம்.

அவ்வாறின்றி, லாப நோக்கத்தில் விலையை உயர்த்தினால், அந்நிறுவனங்களின் செயல்பாடுகள், நிதி நிலை அறிக்கைகள் ஆகியவை குறித்து, லாப தடுப்பு ஆணையம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கும். சரக்கு மற்றும் சேவை வரி அமலானால், எண்ணற்ற பொருட்களின் விலை குறையும். குறிப்பாக, உணவு தானியங்கள் பூஜ்ஜிய வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் வரி:

ஜி.எஸ்.டி.,யால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய, 55 வகையான ஆடம்பர பொருட்களுக்கு, கூடுதல் வரி விதிக்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு செய்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.