Breaking News
பால் கெட்டுப்போகாமல் இருக்க தனியார் பால் நிறுவனத்தினர் வேதிபொருட்களை சேர்க்கிறார்கள்

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆவின் பால்பண்ணை வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 97 லட்சத்து 45 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது கூறியதாவது:-

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது. தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிறுவனம் ரூ.361 கோடி லாபத்தில் இயங்கி வருகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆவின் கொள்முதல் 15 லட்சம் லிட்டராக இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் 30 லட்சம் லிட்டராக கொள்முதல் அதிகரித்துள்ளது. அதை 50 லட்சம் லிட்டராக கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமானது

ஆவின் பால் தரமானது. இதனால் பொதுமக்கள் ஆவின் பாலை அதிகமாக பயன்படுத்துகின்றனர். தனியார் பால் நிறுவனத்தினர் பால் கெட்டுப்போகாமல் இருக்க வேதிபொருட்களை சேர்க்கின்றனர். ஆவின் பாலில் வேதிபொருட்கள் எதுவும் சேர்ப்பது இல்லை. விரைவில் அனைத்து கல்லூரிகளிலும் ஆவின் பால்பூத் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது சிலர் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்கிறார்கள். மக்கள் ஆதரவோடு இந்த ஆட்சி தொடர்ந்து வெற்றி நடைபோடும். அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குனர் காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பலராமன், டி.ஏ.ஏழுமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆவின் கூட்டுறவு ஒன்றிய தலைவர் வேலஞ்சேரி சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, ஆவின் பொது மேலாளர் ராஜாகுமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.