வாக்குப்பதிவு இயந்திர சோதனையில் நாங்கள் வெற்றி பெறுவோம் – தேர்தல் ஆணையம்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தில்லுமுல்லுகளுக்கு அப்பாற்பட்டவை. ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் சோதனையில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு நிரூபிக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார் தேர்தல் ஆணையர் ஜைதி.
சமீபத்திய தேர்தல்களில் படுதோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பேரளவு தில்லுமுல்லு நடைபெற்றது என்று குற்றஞ்சாட்டின. இதையடுத்து தேர்தல் ஆணையம் மே மாதம் 20 ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை ஜூன் 3 தேதி முதல் நேரில் பரிசோதனை நடத்தி நிரூபிக்க அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தது.
இதற்கு நடுவே ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பேரவை உறுப்பினர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று பேரவையில் செய்முறை செய்துக்காட்டினார். இப்பின்னணியில் ஜூன் 3 ஆம் தேதி முதல் அரசியல் கட்சிகள் தங்கள் முயற்சியை நடத்திக்காட்டலாம் என்றார் ஜைதி. அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியின் போது அவர் இவ்வாறு கூறினார். மேலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இந்தப் பரிசோதனையை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினர். இப்பரிசோதனை கௌரவம் தொடர்பானது அல்ல. அதில் வெற்றி, தோல்விக்கு இடமில்லை. பரிசோதனை செய்வது ஒரு கற்றல் செயல்பாடாக இருக்கிறது; அது தேர்தல் ஆணையத்திற்கும் சரி, பங்குதாரர்களான அரசியல் கட்சிகளுக்கும் சரி பொதுவானதாக இருக்கும் என்றார் ஜைதி.
உலகில் பல நாடுகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட்டது குறித்து கேட்கப்பட்டப்போது அந்நாடுகளில் தனியார் இயந்திரங்களை தயாரித்து அளித்தனர். இங்கு பொதுத்துறை நிறுவனங்கள் வழங்குகின்றன என்று பதிலளித்தார். இனி வருங்காலங்களில் ஒப்புகைச் சீட்டு முறை நடைமுறைபடுத்தப்படும் என்று கூறினார் ஜைதி.
இதன் நடுவே ஆம் ஆத்மி கட்சி அளித்த ஒரு மனுவில் பரிசோதனையில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் இயந்திரங்களின் மதர் போர்ட் எனும் முக்கிய தகவல் அலகில் எவ்வித மாற்றமும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையை மறுபரிசீலனை செய்யும்படி கோரியுள்ளது.