தங்களது ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்காதீர்; பெற்றோருக்கு தெண்டுல்கர் வேண்டுகோள்
எனது தந்தை ஒரு பேராசிரியர். ஆனால் அவர் எந்த ஒரு சமயத்திலும் தனது விருப்பத்தை என்னிடம் திணிக்கவில்லை. எனது போக்கிலேயே விட்டு விட்டார். ஆனால், ‘வாழ்க்கையில் எதை அடைய விரும்பினாலும், அதில் மிகச்சிறந்த செயல்பாட்டை காட்ட வேண்டும்’ என்பதை மட்டும் அவர் எனக்கு போதித்தார்.
நானும் எனது குழந்தைகளை அவர்களது விரும்பிய துறையில் செல்ல அவர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். மகன் அர்ஜூன் கிரிக்கெட் விளையாட வேண்டும், மகள் சாரா குறிப்பிட்ட துறையில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நிர்ப்பந்தித்தால் அது நியாயமாக இருக்காது. அவர்கள் என்னவாக விரும்புகிறார்களோ அதுவே எனது விருப்பம். ஆனால் அவர்களை தெண்டுல்கரின் பிள்ளைகள் என்ற கோணத்தில் பார்க்காமல், அவர்களுக்குரிய சிறப்புடன் தனியாக மதிப்பிடப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
என்னை பற்றிய படத்தின் மூலம் நான் சொல்ல விரும்பும் செய்தி இது தான். குழந்தைகள் மீது பெற்றோர் தங்களது ஆசையை திணிப்பதற்கு பதிலாக அவர்களது ஆசைக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.