Breaking News
2-வது மினி உலக கோப்பை (2000)

1999-ம் ஆண்டு உலக கோப்பையில் பெற்ற தரவரிசையின் அடிப்படையில் முன்னிலை வகித்த முதல் 5 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெற்றன. மற்ற 6 அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடின. ‘தோற்றால் வெளியேறு’ என்ற நாக்-அவுட் சுற்று பாணிலேயே இந்த முறையும் நடத்தப்பட்டது.

சவுரவ் கங்குலி தலைமையில் களம் கண்ட இந்திய அணி கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவை எளிதில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் மூலம் யுவராஜ்சிங், ஜாகீர்கான் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்தனர். இலங்கை அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசையும், இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தன.

கால்இறுதியில் இந்திய அணி உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்தது. யுவராஜ்சிங் 84 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய ஸ்டீவ்வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா 46.4 ஓவர்களில் 245 ரன்களில் ஆல்-அவுட் ஆகி நடையை கட்டியது. மற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையையும், நியூசிலாந்து 64 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும், தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

அரைஇறுதியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது. கேப்டன் சவுரவ் கங்குலி 141 ரன்கள் (142 பந்து, 11 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி மிரட்டினார். கடின இலக்கை நெருங்க முடியாமல் தவித்த ஷான் பொல்லாக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 41 ஓவர்களில் 200 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்னொரு அரைஇறுதியில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாய்த்தது. பாகிஸ்தான் அணியில் சயீத் அன்வர் (104 ரன்) சதம் அடித்தும் பலன் இல்லை.

இதையடுத்து இந்தியா-நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி நைரோபியில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் ஸ்டீவன் பிளமிங் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சவுரவ் கங்குலியும், சச்சின் தெண்டுல்கரும் (69 ரன்) முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் திரட்டி வலுவான அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தனர். ஆனால் அதை மிடில்வரிசை பேட்ஸ்மேன்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தவறியதால் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட வெகுவாக தளர்ந்தது. கங்குலி தனது 15-வது சதத்தை (117 ரன்) அடித்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 132 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த போது இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தென்பட்டது. அதன் பிறகு கிறிஸ் கெய்ன்ஸ் தனிநபராக போராடி தோல்வியின் விளிம்பில் இருந்த தங்கள் அணியை மீட்டெடுத்தார். சதம் அடித்த அவர் (102 ரன், 8 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசியில் இந்திய ரசிகர்களின் இதயங்களையும் நொறுக்கினார்.

இரண்டு பந்து மீதம் வைத்து இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், சாம்பியன்ஸ் கோப்பையையும் தட்டிச்சென்றது. இப்போது வரைக்கும் நியூசிலாந்து வென்ற ஒரே ஐ.சி.சி. கோப்பை இது தான்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.