தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் முரளிதரன்
ஐபிஎல் போட்டியை போலவே கடந்த வருடம் உருவானது தமிழ்நாடு பிரிமியர் போட்டி. இந்த போட்டிகளுக்கு கடந்த ஆண்டு நல்ல வரவேற்பு இருந்ததை அடுத்து இந்த ஆண்டும் மிகப்பெரிய அளவில் இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இந்த ஆண்டு ஜூலையில் நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் அணியில் இலங்கை அணியின் ஜாம்பவான் முத்தையா முரளீதரனை ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த அணியின் உரிமையாளரும், முன்னாள் இந்திய அணி வீரரும், அணித் தேர்வாளருமான வி.பி. சந்திரசேகர் கூறுகையில் ‘‘முரளீதரன் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுவார். முரளீதரனை ஆலோசகராக நியமிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கனவு கண்டதும் கிடையாது. திட்டமிட்டதும் கிடையாது.
வீரர்களை வழிநடத்திச் செல்ல அனுபவமான வீரர் ஒருவர் எங்கள் அணிக்கு தேவைப்பட்டது. முத்தையா முரளீதரன் கிரிக்கெட்டில் அதிக திறனைப் பெற்றவர். அவர் இதை சரியாக செய்வார் என்று நாங்கள் நினைத்தோம். தொடர் முழுவதும் அவர் அணியுடன் இணைந்து இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் மாநில லீக்கில் ஆலோசகராக ஒத்துக்கொள்வது சிறப்பானது’’ என்றார்.