போயஸ் கார்டன் எங்களுக்கே சொந்தம்: ஜெ., அண்ணன் மகள் தீபா அறிக்கை
‘போயஸ் கார்டன் எனக்கும், தீபக்கிற்கும் சொந்தமானது; நினைவிடமாக்க அரசுக்கு உரிமையில்லை’ என, ஜெ., அண்ணன் மகள் தீபா தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: போயஸ் கார்டன் எனக்கும், தீபக்கிற்கும் சொந்தமானது. ஜெ.,யின் ரத்த உறவுகளான, எங்கள் இருவரையும் பழிவாங்கும் நோக்கில், அ.தி.மு.க.,வின் இரு அணிகளும், போயஸ் கார்டன் வீட்டை, நினைவிடமாக்க பார்க்கின்றன. அவர்களின் தவறுகளை மறைக்கவே, போயஸ் கார்டனை நினைவிடமாக்கும் திட்டம் முன்வைக்கப்படுகிறது.
ஜெ.,யின் அனைத்து சொத்துகளுக்கும், சட்ட ரீதியான வாரிசுகள், நானும், தீபக்கும் தான். எங்களிடம் முன் அனுமதி பெறாமல், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்குவது, சட்டப்படியும், தார்மீக ரீதியிலும் தவறானது.
சசிகலாவின் பினாமியாக செயல்படும் இந்த அரசுக்கு, போயஸ் கார்டனை நினைவிடமாக்க உரிமை இல்லை. ஒருவேளை, சசிகலா இந்த நாடகத்தை நடத்தினால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நானும் தயார். ஜெ.,க்கு ஓட்டளித்த மக்களுக்காக, இந்த பினாமி அரசு பணிபுரிய வேண்டும். இவ்வாறு தீபா கூறியுள்ளார்.