Breaking News
மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?

தமிழக வனத்துறை சார்பில், மாபெரும் மரங்கள் வளர்ப்பு திட்டம், ஜெ., மறைவுக்கு பின், அடியோடு முடக்கப்பட்டு விட்டது.

தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துறை சார்பில், மாபெரும் மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்வராக, ஜெ., இருந்த போது, வனத்துறை பண்ணைகளில், நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வந்தன.

தமிழகத்திலுள்ள, 32 மாவட்டங்களில், சென்னை நீங்கலாக, மற்ற மாவட்டங்களுக்கு, மரக்கன்று வளர்ப்பு மற்றும் நடவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆறு மாதத்துக்கு முன்னரே, இதற்கான திட்டமிடல், நிதி ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வனத்துறை சார்பில் நாற்றுப்பண்ணை அமைக்கப்படும்.

அதன்பின், ஜெ., பிறந்த நாளான, பிப்.,24 முதல், மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கும். இத்திட்டத்தில், விவசாயிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மரக்கன்றுகள் நடுதல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளுதல் என, பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மரம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை காலங்களில், மரம் நடவு பணிகள் தீவிரமடையும். ஆனால், ஜெ., மறைவை தொடர்ந்து, மரம் வளர்க்கும் திட்டத்தை, தற்போதைய தமிழக அரசு கைவிட்டுள்ளது. இதனால், வனத்துறை சார்பிலான மாபெரும் மரம் வளர்ப்பு திட்டம் முடங்கியுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில அளவில், மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து, மாவட்டத்திற்கு ஏற்ப, மரக்கன்று வளர்ப்பு, நடவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்படும். இதற்காக, வனத்துறை, சமூக காடுகள் வளர்ப்பு திட்டம் மூலம், நீர், மண் வசதி உள்ள பகுதிகளில் நாற்றுப்பண்ணைகள் அமைத்து, மரங்களின் நாற்றுக்கள் தயார் செய்யப்படும்.

இந்தாண்டு, நிதி ஒதுக்கவில்லை; நாற்றுப்பண்ணைகளும் அமைக்கவில்லை. சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தில் மட்டும் ஒதுக்கப்பட்டு, ஒரு சில பகுதிகளில் குறைந்தளவு நாற்றுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.