Breaking News
இந்தியா-ஜெர்மன் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து

ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் இருதரப்பு உறவு, பொருளாதார நல்லுறவு குறித்து இன்று(மே 30) விவாதிக்க உள்ளார். பேச்சின் போது, பல்வேறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருதரப்பு உறவு :

பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மன், ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு, ஆறு நாள் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டார். பயணத் திட்டப்படி, முதற்கட்டமாக, ஜெர்மன் தலைநகர், பெர்லினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, விமானம் மூலம் நேற்று வந்தடைந்தார். இருதரப்பு பொருளாதார உறவு மேம்படுத்தும் வகையில், இப்பயணத்தை பிரமர் மோடி மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தை, ‘இருதரப்பு உறவில், புதிய சகாப்தம்’ என வர்ணித்துள்ள பிரதமர் மோடி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை, நேற்று மாலை சந்தித்து பேசினார்.

விவாதம்:

பெர்லின் நகர் அருகே உள்ள, 18ம் நுாற்றாண்டை சேர்ந்த அரண்மனையில், மோடியும், மெர்கலும், இருதரப்பு உறவு குறித்து பேசினர். இருப்பினும், இரு நாடுகளின் பிரதமர்களும், இன்று முறைப்படி, இருதரப்பு உறவு, பொருளாதார நல்லுறவு குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். இந்தியா – ஜெர்மன் இடையே, ஐ.ஜி.சி., எனப்படும், அரசுகள் இடையிலான பேச்சு, டில்லியில், 2015, அக்டோபரில் நடந்தது. அதன் பின், ஐ.ஜி.சி., பேச்சு, இன்று மீண்டும் நடக்கவுள்ளது. இந்த பேச்சின் போது, பல்வேறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதம் :

தெற்கு சீனக்கடல் பகுதியில் நிலவும் பிரச்னை, சீனாவின், ‘ஒரு பிராந்தியம்; ஒரு சாலை’ திட்டம், அதிகரித்து வரும் பயங்கரவாதம் ஆகியவை குறித்து, பிரதமர் மோடியும், மெர்கலும் விவாதிப்பர் எனத் தெரிகிறது. மதிய விருந்து நிகழ்ச்சியின் போது, இரு தலைவர்களும், மூத்த தொழிலதிபர்களை சந்திக்கின்றனர். இன்று மாலை, ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்ததாக, ஸ்பெயின் செல்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.