கேப்டன் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே மோதல்?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவை திடீரென மாற்றுவதற்கான நடவடிககைகளில் பிசிசிஐ இறங்கியிருப்பதன் பின்னணியில் கேப்டன் கோலிக்கும் கும்ப்ளேவுக்கு இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என்று தெரிகிறது.
அனில் கும்ப்ளேவுக்கு எதிராக விராட் கோலி தண்டத்தை உயர்த்தினாரா என்று கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் ‘மிகப்பெரிய அளவில் ஆமாம்’ என்பதே.
இது குறித்து பிசிசிஐ முக்கியஸ்தர்களிடம் விராட் கோலி புகார் எழுப்பியதாகத் தெரிகிறது, அதாவது அணி வீரர்களுக்கும் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே உறவுகள் சுமுகமாக இல்லை என்று விராட் கோலி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் முதலே இந்திய அணியின் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளாக அனில் கும்ப்ளேவுக்கும், விராட் கோலிக்கும் மோதல் ஏற்படும் என்று கருத்தாளர்கள் சிலர் தெரிவித்த வந்தவண்ணமே இருந்தனர்.
பிசிசிஐ-க்கும் இந்த மோதல் விவகாரம் சென்றதால், அதிரடி வீரர் விரேந்திர சேவாக்கை தலைமை பயிற்சியாளர் பொறுப்பேற்க விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியின் போது சேவாகிடம் இதனை வலியுறுத்தியதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் ‘நஜாப்கர் இளவரசன்’ என்று அழைக்கப்படும் அதிரடி வீரர் சேவாக், தனக்கு அதில் விருப்பமில்லை என்று கைகழுவியதாகவே கூறப்படுகிறது. ஒரு அதிகாரி கூறும்போது, “சேவாக்கிடம் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை கிட்டத்தட்ட கொடுத்ததாகவே கருதப்பட்ட நிகழ்வு இது” என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆடவில்லை, ரஹானே கேப்டன் பொறுப்பில் இருந்தார். இதில் இடது கை சைனமன் பவுலர் குல்தீப் யாதவ்வை சேர்க்க வேண்டும் என்று கும்ப்ளே வலியுறுத்தியதாகவும், கோலி இதனை ஏற்கவில்லை என்றும் இதனால் மோதல் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது, ஆனால் பயிற்சியாளரையே மாற்ற வேண்டுமென்ற அளவுக்கு இந்த மோதல் பெரிய விவகாரமா என்பது தெரியவில்லை.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும் போது, “இது காரணமாகவும் இருக்கலாம், இல்லாமலும்கூட போகலாம். ஆனால் அதிகார மட்டத்துடன் தொடர்பில் உள்ள சிலர் கூறுவது என்னவெனில் கும்ப்ளே வீரர்களுக்கு சுதந்திரம் வழங்க மறுக்கிறார் என்பதே புகாராக எழுந்துள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட்டின் லெஜண்ட் (கும்ப்ளே) மீது இத்தகைய அபவாதம் கூறப்படுவது சோகமே” என்றார்.
சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் பயோபிக் ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற படத்தைக் காண இந்திய அணி சென்றிருந்தது. அப்போது விராட் கோலி அணிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே விரிசலடையும் உறவு பற்றி சச்சினிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது நடந்தது மே. 24-ம் தேதி என்றால் மே 25-ம் தேதி பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.